

கரும்பு விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க முத்தரப்பு கூட்டத்தை கூட்டி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 27 தனியார் சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை ஆலைகளும், 13 கூட்டுறவுத் துறை ஆலைகளும் இயங்கி வருகின்றன. கரும்பு விவசாயத்தில் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் 8.6 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,650 என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.
இதில் போக்குவரத்து செலவினங்களுக்காக ரூ.100 பிடித்தம் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை தங்களுக்கு கட்டுப்படியான தாக இல்லை என்று விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். கரும்பின் கொள்முதல் விலை, எந்த கலந்தாலோசனையும் இன்றி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் அரவைப் பருவம் தொடங்கி 3 மாதங்கள் ஆகியும், மாநில அரசின் பரிந்துரை விலை அறிவிக்கப்படவில்லை. இதனால் டன்னுக்கு ரூ.2,550 என்ற பழைய விலைதான் வழங்கப்படு கிறது. தனியார் சர்க்கரை ஆலைகளோ ரூ.2,300 முதல் ரூ.2,400 வரை மட்டுமே தருகின்றன.
கரும்பு விவசாயிகள் ஏற்கெனவே வஞ்சிக்கப்பட்டுவரும் நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள டன் ஒன்றுக்கு ரூ.2,200 என்ற விலையையே வழங்க தமிழக அரசின் சர்க்கரைத்துறை இயக்குநர், ஆலைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதற்கு கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர் பெரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
எனவே, கரும்பு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க, விவசாய சங்கங்கள், ஆலை நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி, டன் ஒன்றுக்கு ரூ.3500-க்கு குறையாமல் நிர்ணயிக்க வேண்டும். மேலும் கரும்பு விவசாயிகளுக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.200 கோடியை உடனடியாக வழங்க அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.