

புதுச்சேரி துறைமுகத்தை நவீனப் படுத்துவதற்காக, காமராஜர் துறை முகம் புதுவை அரசுடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், சென்னையில் இருந்து புதுவைக்கு கப்பல் மூலம் சரக்குகளை அனுப்ப முடிவதோடு, புதுவையின் சுற்றுலாத் துறை மேம்பாடு அடையும். அத்துடன், வேலைவாய்ப்பும் பெருகும்.
புதுவை துறைமுகம் மூலம் ரோமானியர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தே சர்வதேச நாடுகளுடன் வர்த்தகப் பரிவர்த்தனை நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக, பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் இத்துறைமுகம் சர்வதேச வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது. பின்னர், நாளடைவில் பல்வேறு காரணங்களால் இத்துறைமுகத்தில் வர்த்தகம் நடைபெறுவது குறையத் தொடங்கியது. சரக்குக் கப்பல்கள் வருகை நின்றுபோனது.
இந்நிலையில், இத்துறை முகத்தை மீண்டும் புனரமைக்க புதுவை அரசு முடிவு செய்துள் ளது. எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகம், இத்துறை முகத்தை புனரமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து, காமராஜர் துறைமுக உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
புதுவை துறைமுகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் புதுவை அரசு இறங்கியது. இதையடுத்து, கடந்த 2006-ம் ஆண்டு முதல் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது, அக்கப்பல் தளங்களில் மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துறைமுகத்தை புனர மைத்து மீண்டும் சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்களை கையாள புதுவை அரசு முடிவு செய்துள்ளது. இத்துறை முகத்தை புனரமைத்து தரும்படி புதுவை அரசு கேட்டுக் கொண்டதற் கிணங்க, புதுவை அரசுடன் காமராஜர் துறைமுகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக இத்துறைமுகத்தை சீரமைப்பதற் கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக, ஒரு கன்சல் டன்ட் நிறுவனத்திடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், துறைமுகத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
ஆரம்ப கட்டப் பணிகளுக்காக ரூ.3 கோடி நிதியை காமராஜர் துறைமுகம் அளிக்கும். இரண்டாண்டு காலத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்படும். இதன் மூலம், சென்னையில் இருந்து புதுவை, கடலூர் ஆகிய இடங்களுக்கு சரக்குகளை கப்பல்கள் மூலம் அனுப்ப முடியும்.
இதனால், சாலை வழியில் கன்டெய்னர் லாரி போக்குவரத்து நெரிசல் குறையும். அத்துடன், சுற்றுலா கப்பல்களையும் இயக்க முடிவதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதன் காரணமாக, புதுவை அரசுக்கு வருவாய் அதிகரிப்பதோடு, அதிகளவு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.