

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
ஜெ. தரப்பு கோரிக்கை:
இன்றைய விசாரணையின்போது, "உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீடுக்கான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். நீதிமன்றத்தில் தினமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, வருமான வரி கணக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்க மறுத்துவிட்டார். எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, வருமான வரிக் கணக்கு ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும்” என ஜெயலலிதா தரப்பில் வாதிடப்படும் என கூறப்படுகிறது.
நாரிமன் இல்லை:
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், சொந்த வேலையாக மும்பை செல்வதால் அவர் இன்று ஆஜராக மாட்டார். அவருக்கு பதிலாக வேறு வழக்கறிஞர் ஆஜராவர் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்ற வழிமுறைகள் என்னென்ன?
ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை தொடர்பான சில வழிமுறைகள் இன்று நீதிமன்றம் வெளியிடலாம் எனத் தெரிகிறது.
கர்நாடக உயர் நீதிமன்றத்திலேயே ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையை நடத்துவதா? இல்லை இதற்காக தனி நீதிமன்றம் அமைப்பதா? அவ்வாறு தனி நீதிமன்றம் அமைத்தால் அதற்காக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமிப்பதா இல்லை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமிக்கலமா போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பளித்தது.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஜாமீன் வழங்கியது. மேலும் டிசம்பர் 17-ம் தேதிக்குள் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீடுக்கான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேல் முறையீடு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, கடந்த 8-ம் தேதி (டிச.8) ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பான சுமார் 2.15 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.