Last Updated : 27 Dec, 2014 09:44 AM

 

Published : 27 Dec 2014 09:44 AM
Last Updated : 27 Dec 2014 09:44 AM

பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடக்குமா?- அரசின் கருணைக்காக ஏங்கும் தென்மாவட்டங்கள்

இன்னும் வெகு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் பொங்கல் பண்டிகை நாளில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கருணைக் காக தென் மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக 2007-ம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கிராமங்கள்தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

எனவே தமிழக அரசு தலையிட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வாதா டியது. அதன்பேரில் பல்வேறு நிபந் தனைகள், வழிகாட்டுதல்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு ‘ஜல்லிக் கட்டு முறைப்படுத்தும் சட்டம்’ தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்டது. அதன்மூலம் சில ஆண்டுகளாக தென் மாவட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத் தப்பட்டு வந்தது. அப்போது பல இடங்களில், உச்ச நீதிமன்ற வழி காட்டுதல்களை முறையாகப் பின் பற்றவில்லை என விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் ஜல்லிக்கட்டுக்கு முற்றி லும் தடை விதித்து கடந்த மே 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென் மாவட்ட மக்களுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. தீர்ப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து ஜூன் 11-ம் தேதி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன் றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய் யப்பட்டது. இதேபோல் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை உள்ளிட்ட சில சங்கங்களும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தன. ஆனால் அந்த மனுக்கள் இதுவரை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில் பொங்கல் திருநாள் நெருங்கிவிட்டது. பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தை 1-ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரம், 2-ம் தேதி மதுரை மாவட்டம் பாலமேடு, திருச்சி மாவட்டம் சூரியூர், 3-ம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், திருச்சி மாவட்டம் ஆவாரங்காடு ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் உச்ச நீதிமன்றத் தடை அமலில் இருப்பதால் இந்தாண்டு நடப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. எனவே தடையை உடைத்து ஜல்லிக் கட்டை நடத்த சட்ட ரீதியிலான நடவடிக் கைகளை தமிழக அரசும், அமைப்பு களும் முன்னெடுத் துள்ளன. அதேபோல மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்து வதில் கிராம மக்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ‘ஜுரம்’ உச்சத்தை எட்டியுள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் பி.ராஜ சேகரன் கூறும்போது, ‘உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு விசாரணைக்கு வந்து, அதில் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டை நடத்தும் அளவுக்கு தற்போது கால அவகாசம் இல்லை. பொங்கல் நெருங்கிவிட்டது. எனவே தற்போது மத்திய, மாநில அரசுகளையே நம்பியுள்ளோம்.

ஜல்லிக்கட்டை பாதுகாக்க தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த தடையாக இருக்கக்கூடிய, 1960-ல் இயற்றப்பட்ட விலங்குகள் வதைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கும் வலியுறுத்தி வருகிறோம். இவை நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.

இதுபற்றி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இணைச் செயலர் ராஜேஷ் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டு தீர்ப்பின் மீதான சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை. பண்டிகை கால விடுமுறையால் ஜனவரி 5-க்குப் பிறகு மீண்டும் உச்ச நீதிமன்றம் செயல்படத் தொடங்கும்.

அதன்பின் அடுத்த 10 நாட்களுக்குள் இந்த விசாரணையை முடித்து, அனுமதியைப் பெற்றால் மட்டுமே ஜல்லிக்கட்டுவை நடத்த முடியும். எனவே அதற்கான ஏற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின் றன. மத்திய, மாநில அரசுகள் மனம் வைத்தால் மட்டுமே சட்டரீதியிலோ அல்லது சிறப்பு அனுமதி மூலமோ இதற்கு விரைவில் தீர்வு காண முடியும். பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை நேற்று முன்தினம் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x