

தமிழகத்தில் நடைபெறும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும், அதிகரித்து வரும் கவுரவக் கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சென்னையில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தீண்டாமை என்னும் வன்கொடுமையை ஒழிக்க வேண்டும், கவுரவக் கொலைகளை தடுக்க வேண்டும், எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடைச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ் வுரிமை இயக்கத் தலைவரான நல்லகண்ணு இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டம் பற்றி அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் 37 கவுரவ கொலைகள் நிகழ்ந்துள்ளன. தென் தமிழகத்தில் சாதி மோதல்கள், கவுரவ கொலைகள் நடைபெறவில்லை என்று முதல்வர் சட்டமன்றத்தில் கூறுகிறார். ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ரீதியிலான கொலைகள் 2013-ம் ஆண்டில் 5-ம், 2014-ல் இதுவரை 10-ம் நடந்துள்ளன என்று அவரே கூறியுள்ளார்.
தீண்டாமை இன்று பல வடி வங்களில் கடைபிடிக்கப்படுகிறது. தலித் இளைஞர்கள் கைக்கடிகாரம் கட்டிக்கொள்ளக் கூடாது, ஒன்றாக கூடி பேசக் கூடாது என்று கூறுவதும் தீண்டாமைதான். இத்தகைய 150 வகையான தீண்டாமை வடிவங்களை அங்கீகரிக்கும் திருத்தப்பட்ட வன்கொடுமை தடை சட்டம் அவசர சட்டமாக 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை பலப்படுத்தி முறையாக உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்றார் அவர்.
உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஆர்.சுசிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.