வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஜாபர்சேட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஜனவரி 6 வரை செயல்படுத்த தடை - மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஜாபர்சேட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஜனவரி 6 வரை செயல்படுத்த தடை - மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், கூடுதல் டிஜிபி ஜாபர்சேட்டிடம் விளக்கம் கேட்டு உள்துறை செயலாளர் அனுப்பிய 2 நோட்டீஸ்களை அடுத்த மாதம் 6-ம் தேதி வரை செயல்படுத்த தடை விதித்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

1986-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட், பல்வேறு பதவி உயர்வுக்குப் பிறகு 1998-ல் தமிழக உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார். இப்பதவியில் 2011-ம் ஆண்டு வரை நீடித்தார். இதற்கிடையே, 2007-2011 ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவியும், மூத்த மகளும் சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் மீது, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 2011-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஜாபர்சேட்டிடம் விளக்கம் கேட்டு தமிழக உள்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு 10 நாட்களில் பதில் அளிக்கவும் அவர் உத்தரவிட்டார். அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும் என்று உள்துறை செயலாளருக்கு ஜாபர்சேட் கடிதம் எழுதினார். அதனை உள்துறை செயலாளர் நிராகரித்தார். கடந்த மாதம் 13-ம் தேதி ஜாபர்சேட்டுக்கு உள்துறை செயலாளர் மற்றொரு நோட்டீஸை அனுப்பினார். அப்போதும் தேவையான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதனால், துறை ரீதியான நடவடிக்கைக்காக விளக்கம் கேட்டு அளிக்கப்பட்ட இந்த நோட்டீஸ்களை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஜாபர்சேட் மனுதாக்கல் செய்தார்.

மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினர்கள் கே.இளங்கோ, பி.பிரபாகரன் ஆகியோர் இந்த மனுவை நேற்று விசாரித்து, ஜாபர்சேட்டுக்கு விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட நோட்டீஸ்களை அடுத்த மாதம் 6-ம் தேதி வரை செயல்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in