Published : 30 Nov 2014 05:22 PM
Last Updated : 30 Nov 2014 05:22 PM

"பால் வார்த்த பாலாறு பாழானதே!"

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி - என

மேவிய யாறு பலவோடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு.

- பாரதியார்

செந்தமிழ் நாட்டின் செழிப்பை, இப்படித்தான் தனது பாடலில் விவரித்துள்ளார் மகாகவி பாரதி. பாரதியின் வரிகளுக்கேற்ப, நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்தபடியாக வடாற்காடு மாவட்டம் (ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டம்) அதிக அளவில் நெற் பயிரிடும் பகுதியாக இருந்தது. பசுமையின் அடையாளத்துக்கு ஆணிவேராக இருந்த பாலாறு, இன்று தோல் கழிவுநீர் ஏரியாக மாறி விவசாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்திதுர்கம் மலையில் உருவாகும் பாலாறு 93 கி.மீ தொலைவுக்கு கர்நாடகத்தில் பாய்ந்தோடியது. 33 கி.மீ தொலைவு ஆந்திர மாநிலத்தில் பாய்ந்தோடியது. தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணித்து வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை வளமாக்கி வங்கக் கடலில் கலந்தது. இது கடந்தகால வரலாறு...

தற்போதைய நிலையில், பாலாற்றுத் தண்ணீர் ஆந்திர மாநிலத்தைக் கடந்து வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைசூர் சமஸ்தானம், ராஜ்தானி (சென்னை மாகாணம்) அரசுகளுக்கு இடையில் 1892-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி காவிரி, தென்பெண்ணை, வடபெண்ணை, பாலாறு, துங்கபத்திரா உள்ளிட்ட 15 நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்வது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

காவிரி நதிநீர் பங்கீட்டில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டும் அக்கறையில் பாலாற்றை மட்டும் மறந்ததால், வேலூர் மக்கள் இன்று வேதனையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மழை குறைந்த நீர்ப் பிடிப்பு பகுதிகள்

கர்நாடகத்தில் பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் வளர்க்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதால், வழக்கமாகப் பெய்த பருவமழை பொய்த்தது. ஆந்திராவில் பாலாறு கடந்து செல்லும் 33 கி.மீ இடைவெளியில் அம்மாநில அரசு 28 தடுப்பணைகளைக் கட்டியது. இப்படி இரு மாநில அரசுகளின் செயல்பாடுகளால் பாலாற்றில் வந்து கொண்டிருந்த கொஞ்சநஞ்ச தண்ணீரும் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.

நஞ்சுப் பாத்திரமான பாலாறு

பாலாற்றுப் படுகையில் நூறாண்டு களை கடந்து தோல் பதனிடும் தொழில் நடந்து வருகிறது. தோல் பொருள் சார்ந்த ஏற்றுமதியில் இந்தியாவுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியில், சுமார் 60 சதவீதம் வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளால் கிடைக்கிறது. வளமான தண்ணீர்தான் தோல் பதனிடும் தொழிலுக்கு மூலதனம். 1975-ம் ஆண்டு வரை, இயற்கை முறையில் பதப்படுத்திய தோல் கழிவு பாலாற்றில் கலந்தபோது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வெளிநாடு களில் தடை செய்யப்பட்ட குரோமியம் கலந்த ரசாயனம் என்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டதோ, அன்றிலிருந்து பாலாற் றின் அழிவு காலம் தொடங்கிவிட்டது.

காணாமல் போன விவசாயம்

மாவட்டத்தில் விவசாயப் பரப்பளவு வேகமாக குறைந்து வீட்டுமனைகளாக மாறி வருகிறது. 2005-06-ம் ஆண்டு கணக்குப்படி 58 ஆயிரத்து 152 ஹெக்டராக இருந்த நெல் சாகுபடி பரப்பளவு 2011-12-ம் ஆண்டு கணக்குப்படி 37 ஆயிரத்து 989 ஹெக்டராக சுருங்கிவிட்டது. 2005-06-ம் ஆண்டு 17 ஆயிரத்து 202 ஹெக்டராக இருந்த கரும்பு விவசாயம் 2011-12-ம் ஆண்டு 15 ஆயிரத்து 85 ஹெக்டராக குறைந்துவிட்டது.

ஆபத்தில் நிலத்தடி நீர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, ஆற்காடு, குடியாத்தம், கே.வி.குப்பம், கணியம்பாடி, காட்பாடி, மாதனூர், நாட்றம்பள்ளி, பேரணாம்பட்டு, சோளிங்கர், திருப்பத்தூர், வேலூர் ஒன்றியங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது அளவுக்கு மிஞ்சி இருக்கிறது. ஆலங்காயம், திமிரி ஒன்றியம் ஆபத்தான நிலையில் இருக்கிறது.

வாலாஜா ஒன்றியம் ஓரளவுக்குப் பரவாயில்லை. காவேரிப்பாக்கம் ஒன்றியம் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீரைச் சுரண்டும் இதே நிலை தொடர்ந்தால் 2020-ம் ஆண்டில் வேலூர் மாவட்டம் முற்றிலும் பாலைவனமாவதுடன் சுமார் 40 லட்சம் மக்களின் வாழ்வாதாரமும், விவசாயமும் கேள்விக்குறியாகும். பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் மழை நீர் செறிவூட்டுவதும் குறைந்துவிட்டது. பாலாற்றை இணைப்பாக கொண்ட ஏரிகளும் கால்வாய்களும் அடையாளங்கள் இல்லாமல் காட்சியளிக்கின்றன.

தென்பெண்ணை-பாலாறு இணைப்பு

பாலாற்றின் தற்போதைய நிலையை மாற்ற ஒரே வழி தென்பெண்ணை-பாலாறு இணைப்பு மட்டும்தான். கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணா மலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை கிருஷ்ணகிரி நெடுங்கல் அணையில் இருந்து சந்தூர் வழியாக வாணியம்பாடி அருகே பாலாற்றின் உப நதியான கல்லாற்றில் கலக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டம் குறித்து மத்திய அரசின் நீர்வள மேம்பாட்டு முகமை குழுவி னர் ஆய்வு செய்துவரும் நிலையில், மாநில அரசு இந்த திட்டத்தை விரைந்து தொடங்கினால் மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து சாத்தியமாகும்.

நேத்ராவதி குடிநீர் திட்டம்

கர்நாடக மாநிலத்தில் நேத்ராவதி ஆற்றில் இருந்து அரபிக் கடலில் 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கலக்கிறது. இதிலிருந்து 20 டிஎம்சி தண்ணீரை வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள கோலார், சிக்பெலா மாவட்டங்களுக்கு கொண்டு வரும் திட்டத்தை அம்மாநில அரசு தயாரித்துள்ளது.

வேலூர் மாவட்ட எல்லையில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ள கோலார் மாவட்டத்துக்கு இந்த திட்டம் வரும் நிலையில், நேத்ராவதியில் இருந்து கூடுதல் தண்ணீரைப் நாமும் பெற்று பாலாற்றுடன் இணைத்தால் வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களும் பயன் பெறுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x