

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடந்தது. 39 தொகுதிகளிலும் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்திருந்தார். தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தொகுதி வாரியாக ஆண், பெண் வாக்காளர்களின் வாக்கு சதவீதம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் அந்த இணையதளத்தை பார்க்க முயன்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பகல் 1 மணியளவில் தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த இணைய முகவரிக் குள் (http://www.elections.tn.gov.in) சென்றபோது அப்படி யொரு இணையதள பக்கமே இல்லை என்று கணினி திரையில் வந்தது. இதனால் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். தேர்தல் ஆணைய இணையதளத்தை யாராவது முடக்கி வைத்திருக்கலாம் என்று தகவல் பரவியது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது, ‘‘ஆணையத்தின் இணையதளம் யாராலும் முடக்கப்படவில்லை. சில ஹார்டுவேர் பிரச்சினையால் இணையதளத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களவைத் தேர்தல் குறித்த கூடுதல் விவரங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத் திலும், வாட்ஸ் ஆப் மெஸஞ்சரிலும் வெளியிட உள்ளோம்’’ என்றார்.