

பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் இரும்பு வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, எண்ணூர் வ.உ.சி., தெருவில் வசித்தவர் ஜான்சன் (38). இவர் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலைய சாலையில் பழைய இரும்புக் கடை வைத்து இருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடையில் தூங்கிய போது மர்ம நபர்கள் அவரை, தராசு தட்டால் அடித்துக் கொன்றனர். இதுகுறித்து, பொன்னேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் அத்திப்பட்டைச் சேர்ந்த ராஜி என்பவரைக் கைது செய்தனர்.
போலீஸாரிடம் ராஜி, “நான் அத்திப்பட்டு புதுநகரில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடையை நடத்தி வருகிறேன். என்னுடைய கடைக்கு அருகில் ஜான்சன் கடை நடத்தினார். இதனால், என்னுடைய வியாபாரம் பாதிப்படைந்தது. இதனால், எனக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, ஜான்சனை கொல்ல, அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த சீனிவாசன் என்ற பாபட்லா, உலகநாதன், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரகுமான் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டேன்.
கடையில் தூங்கிக் கொண்டிருந்த ஜான்சனின் கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். அவரது முகத்தை எடைக் கருவி மற்றும் கற்களால் தாக்கி சேதப்படுத்தினோம்” என்றார் அவர்.
இதையடுத்து, சீனிவாசன், ரகுமான், உலகநாதன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.