

திராவிடத்துக்கு எதிரான பொது எதிரி தமிழகத்தில் கால் ஊன்றாமல் தடுக்க அதிமுக, திமுக இணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் தவிர மற்ற பிரச்சினைகளில் சேர்ந்து செயல்பட அக்கட்சிகளின் தலைமைகளுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
சொந்த ஊரான கலிங்கபட்டி செல்வதற்காக வைகோ நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர் களிடம் கூறியது:
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுவிட்டு, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திருப்பதியில் சாமி கும்பிட வரு கிறார் ராஜபக்ச. திருப்பதியில் சாமி கும்பிடும் அதே வேளையில் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் ஒவ்வொரு விதத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் நடக்கும். ஆந்திர எல்லைக்குள்ளேயே சென்று வன்முறையின்றி எதிர்ப்பை காட்ட உள்ளோம்.
திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் செய்துள்ளன. தவறு இருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் எல்லா கட்சிகளுமே ஊழல் செய்திருக்கின்றன. ஆனால் திமுக, அதிமுக சண்டையிடுவதால் திராவிட இயக்கங்களே அழிந்து போய்விட்டது என சிலர் பேசப் புறப்பட்டுள்ளனர். அதெல்லாம் நடக்க விடமாட்டோம். பெரியார், அண்ணாவின் பூமி இது. லட்சக் கணக்கானோர் தியாகம் செய்து கட்டிக்காத்த பூமி. இந்த மண்ணில் திராவிட இயக்கங்கள்தான் நிலைத் திருக்கும். இந்துத்துவா சக்திகள் காலூன்ற முடியாது. திமுக, அதிமுகவினர் சண்டையை தேர்த லில் மட்டும் காட்டுங்கள். ஒருவரை யொருவர் எதிர்த்து போட்டுயிடுங் கள். அண்ணா இருக்கும்போது இந்த திராவிட இயக்கத்தில் எம்ஜிஆரும், கருணாநிதியும் ஒன்றாக இருந்தவர்கள். அதை இரு கட்சிகளும் மறந்துவிடக்கூடாது. இப்போது, திராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என நினைத்து கொண்டு தேசிய உணர்வாளர்கள் சிலர் தமிழ் தேசியம் பேசிக் கொண்டு புறப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க அதிமுக, திமுக இணைந்து செயல்பட வேண்டும். இங்கு பொது எதிரியை கால் ஊன்ற விடக்கூடாது. இந்த மனப்பான்மையை அதிமுக, திமுக இரு கட்சிகளின் தலைமைகளும், தொண்டர்களும் யோசியுங்கள். நான் இதை எந்த சுயநலத்தோடு சொல்லவில்லை என்றார்.