

அரசு புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், பாதிக்கப்படுவோரின் குறைகளைக் கேட்க நான்கு வகைக் கமிட்டிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாரப்பா கவுண்டர் என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி, தமிழக அரசுக்கு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. “ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் விதிகளைப் பின்பற்றி, பாதிக்கப்படுவோரின் குறைகளை அறியும் வகையிலான கமிட்டியை அரசு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்படுவோர் நிவாரணம் பெற வழி ஏற்படுத்தினால், அரசுக்கு எதிராக பொதுநல வழக்குகள் வருவதைக் குறைக்க முடியும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தர வைத் தொடர்ந்து, தமிழக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய கமிட்டிகளை அமைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட அரசாணை வருமாறு:
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சில வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் 105 பிரிவு 7-ன் படி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் (அ) வட்டாட்சியர் சார்பில், முன்னறிவிப்பு அளித்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
இம் முன்னறிவிப்பை சம்பந்தப்பட்ட வர் எதிர்த்தால், அவர் தனது குறையை சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு மனு வாக அளிக்க வேண்டும். இந்த மனு வைப் பரிசீலித்து துணை வட்டாட்சியர் அந்தஸ்திலுள்ள அதிகாரி, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை மனு கிடைத்த 60 நாட்களுக்குள் முடித்து, மனுதாரருக்கு எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும். பின்னர், ஆக்கிரமிப்பு உறுதியானால் அகற் றும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
இதில் பாதிக்கப்பட்டவருக்கு திருப்தி இல்லையென்றால் (அ) மனு அளித்து 60 நாட்களுக்குள் பதில் வராவிட்டால், அவர் கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக் கமிட்டியிடம் மனு செய்ய வேண்டும். இக் கமிட்டியில், வருவாய் கோட்ட அதிகாரி, போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சர்வே துறை துணை ஆய்வாளர் இடம்பெறுவார்கள். இந்த அதிகாரிகள் மனுதாரருக்கு முன்னறிவிப்பு கொடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்யலாம். மேலும் மாதம் ஒரு முறை மனுதாரர்களை வரவழைத்து, அவர்களின் குறைகளை கேட்க வேண்டும்.
மேல்முறையீட்டுக் கமிட்டியிடம் பதில் வரவில்லையென்றால், மாவட்ட ஆய்வுக் கமிட்டிக்கு மனு அளிக்கலாம். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், நில அளவீடு உதவி இயக்குநர் ஆகியோர் மாதம் ஒரு முறை கூடி, மனுதாரர்களை அழைத்து, குறை கேட்டு, இடத்தையும் ஆய்வு செய்து, மனு கிடைத்த ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்.
இதையடுத்து, மேற்கண்ட ஆய்வுகள் மற்றும் முடிவுகளின் விவரங்கள் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுவின் முன் வைக்கப்படும். இந்தக் குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் முடிவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்த முடிவுகளை மேற்கொள்ளும். மேலும் மாவட்ட அளவிலான இந்தக் குழுக்களின் தொடர் நடவடிக்கைகளை, நில நிர்வாகத் துறை ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் கண்காணிப்பார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.