Published : 30 Dec 2014 12:27 PM
Last Updated : 30 Dec 2014 12:27 PM

தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் நாளை தொடங்கும்: அரசு அறிவிப்பு

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மக்களின் வாழ்வாதார தொழிலாக நெசவுத் தொழில் முதன்மை பெற்று விளங்குகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்குவதற்காகவும், அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 983 ஆம் ஆண்டு இந்த வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

மேலும், பெண்களின் விருப்பத்திற்கேற்ப சேலைகளின் வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் மாற்றம் மற்றும் தரமான சேலைகளை வழங்கும் வகையில் 60ஆம் எண் பருத்திச் சாயமிட்ட நூலினை பாவாகவும், 80/34 பருமன் சாயமிட்ட பாலியஸ்டர் நூலினை ஊடையாகவும், 150 பருமன் காட்லுக் சாயமிட்ட பாலியஸ்டர் நூலினை கரையாகவும் கொண்ட பாலிகாட் சேலைகளை வழங்க கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஆணையிடப்பட்டது.

நடப்பாண்டு பொங்கல் 2015 விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு 486 கோடியே 36 இலட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 15,000 கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 50,000 விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

இந்தத் திட்டத்திற்கு தேவையான விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வருவாய் துறை வழங்கிய தேவைப் பட்டியலின்படி அனைத்து மாவட்டங்களிலுள்ள தாலுகா அலுவலகங்களுக்கு 5.12.2014 முதல் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் 2015ஆம் திருநாளையொட்டி, விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வேட்டி சேலை விநியோகம் 31.12.2014 முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x