

சுப்பிரமணியன் சுவாமியின் தனிப்பட்ட கருத்துகளுக்கு பதில் சொல்லமுடியாது என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்.
திருச்சியில் நேற்று செய்தியாளர் களைச் சந்தித்த அவரிடம், “பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலக வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார், மதிமுக விலகிவிட்டது. தற்போது பாமகவும் விலகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளாரே” எனக் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், “பாஜகவுடன் கூட்டணி வைத்த போது வைகோ யார் யாரைச் சந்தித்துப் பேசினாரோ அவர்கள் மதிமுக தொடர்பாக எந்த கருத்தை யும் சொல்லவில்லை. ஆனால், விலகிவிடுவது என முடிவு செய்துவிட்டு அதற்கான காரணங் களை வைகோ தேடியிருப்பாரோ எனத் தோன்றுகிறது. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசிய வார்த்தைகள் மிகவும் கடினமானவை. பாமக நிறுவனர் ராமதாஸ் விவரமானவர். சுப்பிர மணியன் சுவாமியின் கருத்து களுக்கெல்லாம் அவர் மதிப்பளிக்க மாட்டார் என நம்புகிறேன்” என்றார்.
இல.கணேசனிடம் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தொடர்பான கேள்விகளை கேட்டபோது, சுப்பிரமணியன் சுவாமியின் தனிப் பட்ட கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாது, அவர் தவிர்த்த கேள்வி களை மட்டும் கேட்கவும் என்றார்.
தொடர்ந்து அவர் மேலும் கூறியது: கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை நாங்கள் எதிர்க்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும், அமைச்சர் உமா பாரதிக்கும் தமிழக பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக் கைதான் விடுத்துள்ளார். இது அரசின் முடிவல்ல என்றார்.