Published : 16 Feb 2014 08:41 AM
Last Updated : 16 Feb 2014 08:41 AM

டெல்லியில் விஜயகாந்த்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு: சோனியா, ராகுலை இன்று சந்திக்க வாய்ப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சுதீஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் மேலிட நிர்வாகி ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர்கள் சோனியா மற்றும் ராகுலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.



வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தனி அணிகளை அமைத்துள்ளன. பாஜக அணியில் பாமக சேர்வது இன்னும் உறுதியாகில்லை. காங்கிரஸ் கட்சியும் இன்னும் எந்தக் கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை.

அதேநேரம் திமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் தேமுதிகவைக் கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளன.

பாஜக அணியில் தேமுதிகவைச் சேர்க்க கடந்த இரண்டு மாதங்களாக பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், விஜயகாந்த் இதுவரை பிடி கொடுக்கவில்லை.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியுடனான விஜயகாந்தின் பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதற்கட்டமாக, தேமுதிக எம்.எல்.ஏ-க்களுடன், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் டெல்லிக்குச் சென்று வெள்ளிக்கிழமை பிரதமரைச் சந்தித்து, தமிழக பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.

இந்த சந்திப்பு முடிந்த பின்னும், விஜயகாந்த் மற்றும் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சனிக்கிழமை டெல்லி ராணுவக் குடியிருப்பில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியிலுள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களைச் சந்திக்க காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து காங்கிரஸ் மற்றும் தேமுதிக வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் வருமாறு:

டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவில், மேலிட காங்கிரஸ் நிர்வாகி ஜிதேந்திர் சிங், குலாம் நபி ஆசாத் ஆகியோருடன் விஜயகாந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பு முழுவதும் ரகசியமாகவே நடந்தது. இந்தச் சந்திப்புகளை சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மூலம் மத்திய அமைச்சர் வாசன்தான் ஏற்பாடு செய்தார்.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்திக்க விஜயகாந்த் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், சனிக்கிழமையன்று சோனியா காந்தி கேரளா மற்றும் லட்சத்தீவிலும், ராகுல்காந்தி கர்நாடகாவிலும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருந்ததால், அவர்களைச் சந்திக்க முடியவில்லை.

இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்தால், சோனியா மற்றும் ராகுலை சந்திக்க ஏற்பாடுகள் செய்வதாக, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x