Published : 01 Dec 2014 09:15 AM
Last Updated : 01 Dec 2014 09:15 AM

கேரள சாமியாருக்கு நேரில் நன்றி தெரிவித்த 5 மீனவர்கள்: 10 நாட்களில் 83 படகுகளும் மீட்கப்படும் எனத் தகவல்

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு மீண்டு வந்த 5 மீனவர்களும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு சாமியாரை நேற்று சந்தித்து ஆசி பெற்றனர். தங்கள் விடுதலைக்கு முயற்சி செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற் படையால் 2011 நவம்பர் 28-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அக்.30-ம் தேதி தூக்கு தண்டனை விதித்தது. இந்தியாவின் தொடர் நடவடிக்கையாக 5 பேருக்கும் அதிபர் ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்ததன்பேரில் நவம்பர் 14-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மீனவர்களின் விடுதலையில் கேரளத்தைச் சேர்ந்த சுவாமி சுனில்தாஸுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாலக்காடு மாவட்டம் முதலமடை கிராமத்தில் உள்ள சினேகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி. பொள்ளாச்சியில் சினேகம் ஷீரடி சாய் கோயில் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். விடுதலையான மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும், மீனவ அமைப்பினரும் சாமியாரை நேற்று முன்தினம் முதலமடை கிராமத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் அவருடன் பொள்ளாச்சியில் உள்ள ஷீரடி சாய் கோயிலுக்கு நேற்று வந்தனர். அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மீனவர்கள் விடுதலையில் தனது பங்கு குறித்து சுவாமி சுனில்தாஸ் கூறியதாவது: 2012-ம் ஆண்டு முதல் மூன்று முறை இலங்கையின் அமைதி கருத்தரங்கில் கலந்து கொண்டு அதிபர் ராஜபக்சவுடன் பேசி வருகிறேன். மீனவர்கள் ஐந்து பேருக்கும் அங்குள்ள உச்ச நீதிமன்றம்தான் தூக்கு தண்டனை வழங்கியது. அதை இலங்கை அதிபர் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அப்போது இலங்கை அதிபருக்கு நாம் மனு கொடுத்தோம்.

அதில், பிரபஞ்சத்துக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளது என்றால் அது இந்தியாவும், இலங்கையும்தான். ஐந்து மீனவர்களுக்கான பிரச்சினை, இந்தியாவின் பிரச்சினையாகும். அது இந்தியா-இலங்கை இடையிலான பிரச்சினையாக மாறும். எனவே அன்பு மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்ற கோரிக்கை வைத்தோம்.

அதன் பிறகு அக்.20-ம் தேதி என்னுடைய ஆசிரமத்தில் இலங்கை அமைச்சர் பிரபாகணேஷ், இலங்கை நாடாளுமன்றச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் தமிழக மீனவப் பிரதிநிதிகள் தேவதாஸ், போஸ் உள்ளிட்ட 15 பேர் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஐந்து மீனவர்களும் நிரபராதிகள் என்பது வலியுறுத்தப்பட்டது. தண்டனை பெற்றுள்ள 5 பேரின் குடும்பங்களின் நிலை குறித்து வீடியோவை இலங்கை அரசின் பிரதிநிதிகளிடம் கொடுத்தோம். அதைப் பார்த்து அவர்கள் வருத்தப்பட்டனர். இலங்கை அதிபருக்கு மீனவர் களின் குடும்பநிலை, மீனவர்கள் நிரபராதிகள் என்பதை வேண்டுத லாக ஒரு மனு அனுப்பினோம். அதில் இந்தியாவும், இலங்கையும் ஒரு தாயின் இரட்டைக் குழந்தைகள் என நாம் சுட்டிக்காட்டியது மிகவும் முக்கியமானது. மீனவர்கள் பிரச்சினை என்பது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

மீனவர் பிரச்சினையில் இந்தியா-இலங்கை இடையே நிரந்தர தீர்வு காண்பது நடைபெற்று வருகிறது. அடுத்த 10 நாட்களில் 83 படகுகளும் விடுவிக்கப்படும். விரைவில் முழுமையாக பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதேபோல கச்சத்தீவை திரும்பப் பெறும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான முடிவுகளும் வரும். கச்சத்தீவு இந்தியாவுக்கானது என்றார்.

மாற்று வேலை

மீனவர்கள் கூறும்போது, ‘மத்திய அரசு, இலங்கை அரசிடம் பேசி 83 படகுகளையும், 3 நாட்டுப்படகுகளையும், 34 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் ரீதியாக கடலில் மீன்பிடிக்க எல்லை என்பது கிடையாது. கடலில் எல்லை என்பது வரைமுறைக்கு அப்பாற்பட்டது. இனிமேல் எங்களால் மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியாது. இலங்கை அரசு எங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதே தவிர, நிரபராதிகள் என நீதிமன்றம் விடுவிக்கவில்லை.

இனி நாங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு, தவறுதலாக கைது செய்யப்பட்டால், மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே எங்கள் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மாற்றுத் தொழில் வாய்ப்புகள் செய்துதர வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x