

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய உண்மைகளை வெளியிடாவிட்டால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளு மன்றத்தை முற்றுகையிடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய ஆவணங்களை மத்திய அரசு உடனடியாக வெளியிடக்கோரி மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். மேற்குவங்க மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியும் இதில் பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது: இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜியின் மரணம் மர்மமாகவே உள்ளது. சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நேதாஜி தொடர்பான விவரங்களை கேட்டபோது 2 முக்கிய கோப்புகளை வெளியிட முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இந்தக் கோப்புகளை வெளியிட்டால் சில வெளிநாடுகளுடனான உறவு பாதிக்கப்படும் என்று பாஜக அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அப்போதைய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நேதாஜி பற்றிய உண்மைகள் வெளியிடப்பட வேண்டும் என்றார். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதை வெளியிடாமல் உள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் நேதாஜியை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். எனவே, அவரைப் பற்றிய உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும். நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நானும் மதிமுக தொண்டர்களும் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்றார்.