

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சித்தி மற்றும் அவரது இரு குழந்தைகளை கொலை செய்த இளைஞருக்கு தூக்குத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை மணலி பகுதியைச் சேர்ந்தவர் வேணு கோபால். இவரது மகன் தீபு (27). இதே பகுதியில் வேணுகோபாலின் தம்பி பாலசந்திரன் குடும்பத்தின ருடன் வசித்து வந்தார். இரு குடும்பங்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. பாலசந்திரனின் மனைவி அம்மாளு ராதாமணியிடம் தீபு தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் பாலசந்திரனின் தேயிலை தோட்டத்தை எரித்துள்ளார். மேலும், பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இரு குடும்பங்களுக்கிடையே தகராறு நடந்து முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி மாலையில் சித்தி அம்மாளு ராதாமணி உறவினர் வீட்டில் தொலைக்காட்சி பார்க்கச் சென்றிருந்தார். பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க ராதாமணி வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது ராதாமணியை அரிவாளால் வெட்டி தீபு கொலை செய்தார். அந்நேரத்தில், 7-ம் வகுப்பு படித்து வந்த ராதாமணியின் மகன் விஷ்ணு (13), 10-ம் வகுப்பு படித்து வந்த மகள் ரம்யா (16) ஆகியோர் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களையும் தீபு வெட்டிக் கொலை செய்துவிட்டு அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
தீபுவின் ஆடைகள் முழுவதும் ரத்தக் கறை படிந்திருந்ததைப் பார்த்து தீபுவின் தந்தை வேணுகோபால் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீபுவிடம் விசாரித்துள்ளனர். அப்போது சித்தப்பா பாலசந்திரன் தீபுவை பார்த்துள்ளார். சித்தப்பாவை கண்டதும் தீபு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனால் சந்தேகமடைந்த பாலசந்திரன் தனது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு ரத்த வெள்ளத்தில் மனைவி அம்மாளு ராதாமணி, மகள் ரம்யா மற்றும் மகன் விஷ்ணு இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளார். கூடலூர் காவல்நிலையத்தில் இது குறித்து பாலசந்திரன் புகார் அளித்தார். போலீஸார் மதுரை பகுதிக்குச் சென்று மூவரின் உடல்களையும் மீட்டு, கொலையாளி தீபுவை தேடி வந்தனர். அடுத்த நாள் அப்பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் தீபு விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீபுவை கூடலூர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இரு பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதால், வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குடும்ப உறவுகளான சித்தி, தங்கை மற்றும் தம்பி ஆகிய மூவரை கருணை இல்லாமல் கொலை செய்ததற்காக தீபுவுக்கு தூக்குத் தண்டனை விதித்து மகளிர் நீதிபதி சர்வமங்களா தீர்ப்பளித்தார்.
மூன்றாவது தூக்குத் தண்டனை
நீலகிரியில் பெரும்பாலான வழக்குகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே வழங்கப் பட்டுள்ளது. இந் நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் இது வரை மூன்று முறை மட்டுமே தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக கடந்த 1994-ம் ஆண்டும், பின்னர் 2000-ம் ஆண்டு இரண்டாவது முறையாகவும், தற்போது 2014-ம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் கொலை குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியில் மகளிர் நீதிமன்றம் இந்த ஆண்டுதான் ஏற்படுத்தப்பட்டது. முதலாம் ஆண்டிலேயே மகளிர் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.