

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, மாநில நிதியமைச்சர்களை அழைத்து மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவார். 2015-16ம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தயாரிப்பு பணியில் மத்திய நிதியமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான மாநில நிதியமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் இன்று நடக்கிறது. கூட்டத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கிறார்.
இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழகத்துக்கான நிதித்தேவை குறித்து மத்திய நிதியமைச்சரிடம் அவர் மனு அளிக்க உள்ளார். இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடியை பன்னீர்செல்வம் சந்தித்து பேசக்கூடும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன