

பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான இளம்பெண்ணின் உடல் நேற்று மாலை சென்னை கொண்டுவரப்பட்டது. சென்னை அண்ணா சாலை எல்ஐசி பின்புறம் உள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலை பூபேகம் 2-வது தெருவில் வசிப்பவர் பாலன். ராயப்பேட்டையில் டயர் விற்பனை செய்யும் நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி பவானி(37). இவர்களின் குழந்தைகள் லட்சுமிதேவி, பாரத்.
உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பவானி தனது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் 8 பேருடன் பெங்களூரு சென்றிருந்தார். சென்னை திரும்புவதற்காக 28-ம் தேதி ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், ரயிலில் இருக்கை உறுதியாகாததால் கூடுதலாக ஒருநாள் அவர் பெங்களூரில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 28-ம் தேதி ஷாப்பிங் சென்றுவிட்டு இரவு 8.30 மணியளவில் பெங்களூரு எம்.ஜி.சாலை சர்ச் தெருவில் வழியாக பவானி, அவரது உறவினர் கார்த்திக் (22) இருவரும் வந்துகொண்டிருந்தனர். அப்போது நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பவானி, கார்த்திக் மற்றும் நடைபாதையில் நடந்துசென்ற ஐகேட் நிறுவன ஊழியர் சந்தீப், ஐ.பி.எம். நிறுவன ஊழியர் வினய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
பவானிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அவர்தான் குண்டுவைத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அவரைப் பற்றி கார்த்திக் கூறிய பிறகே நரசிம்ஹா என்ற ஆட்டோ டிரைவர் உதவி செய்ய முன்வந்தார். பவானியை மீட்டு மல்லையா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அதிக ரத்தம் வெளியேறியதால் பவானி பரிதாபமாக இறந்தார்.
பவானியின் குழந்தைகள் லட்சுமிதேவி, பாரத் இருவரும் அருகில் உள்ள ஸ்டேடியத்தில் விளையாடிக் கொண்டிருந்ததால் குண்டுவெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர். பவானி இறந்த தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்த அவரது கணவர் பாலன் மற்றும் உறவினர்கள் உடனடியாக பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர்.
பவானியின் உடல் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ரயில் மூலம் நேற்று மாலையே அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.