Published : 27 Dec 2014 10:50 AM
Last Updated : 27 Dec 2014 10:50 AM

ஆசிரியையிடம் வழிப்பறி சம்பவம்: கொள்ளையர்களில் ஒருவர் கைது

துரைப்பாக்கத்தில் ஆசிரியை யிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரில் ஒருவரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

துரைப்பாக்கம் எம்சிஎன் நகர் 2-வது சந்து பகுதியை சேர்ந்தவர் வேலம் (39). தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 21-ம் தேதி பள்ளியில் பணி முடிந்தது, ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் ஸ்கூட்டி மீது மோதினர். இதில் நிலைதடுமாறி, வேலம் கீழே விழுந்தார். பைக் பின்னால் அமர்ந்து வந்த இளைஞர், கத்தியை காட்டி மிரட்டி, தாலி செயின் உள்ளிட்ட 14 சவரன் நகைகளை வேலத் திடம் இருந்து பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றார். இந்த சம்பவத்தை அங்கிருந்த வீட்டின் மாடியில் இருந்த ஒரு பெண், செல்போன் மூலமாக வீடியோ எடுத்தார். இதனை தனது தோழிகளுக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினார். பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலும் வீடியோ பரவத் தொடங்கியது. சென்னையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தர வுப்படி, வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ வில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை புகைப்படமாக எடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது. தனிப்படைப் போலீஸார் கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். விசார ணையில், இதே கொள்ளையர்கள் தான் வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற இடங்களில் கத்தி முனையில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என உறுதியானது. இதையடுத்து தனிப்படைப் போலீஸார் விரைந்து சென்று தூத்துக்குடி அண்ணாநகரில் பதுங்கியிருந்த வழிப்பறி கொள்ளையன் அரிகிருஷ்ணன் (32) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். நீராவி முருகன் என்ற மற்றொரு கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர்.

வாக்குமூலம்

போலீஸாரிடம் அரிகிருஷ்ணன் கூறியதாவது:

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த நீராவி முருகனும், நானும் சேர்ந்துதான் துரைப்பாக்கத்தில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்தோம். நீராவி முருகன் வழிப்பறி செய்வதில் கில்லாடி. திமுகவை சேர்ந்த ஆலடி அருணா கொலை வழக்கு உள்ளிட்ட 50-க்கும் மேற் பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட் டுள்ளார். தூத்துக்குடி, மதுரையில் இருமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருக்கிறார். வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுடன் தங்கியுள்ளார். அவர் வைத்திருக்கும் பையில் கத்தி மற்றும் மாற்று உடை இருக்கும். கொள்ளை அடித்துவிட்டு, உடனே வேறு உடையை மாற்றி விடுவார். இவர் 100 சவரன் நகைகளுக்கு மேல் கொள்ளை அடித்துள்ளார்.

இவ்வாறு போலீஸாரிடம் அவர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x