

ஆசிரியர் ஒருவரை கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி கும்பலை கோட்டூர்புரத்தில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கோட்டூர்புரம் கெனால் சாலையில் காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு காரும், ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்றாக வந்தது. அந்த இரண்டையும் மடக்கி போலீஸார் சோதனை செய்தனர்.
காரில் அரிவாள், கத்தி, கடப் பாறை, கம்பி போன்ற ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். உடனே காரில் இருந்த 4 பேரை யும், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரையும் பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பிடிபட்டவர்களின் பெயர் குட்டி, பிரபு, ஸ்டீபன், ராஜேந்திரன், கார்த்திக் என்பதும், பரமக்குடியை சேர்ந்த ரவுடி கும்பல் என்பதும் தெரிந்தது. மேலும், பெருங்குடியில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவரை கொலை செய்வதற்காக சென்னை வந்திருப்பதும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
காவல் இணை ஆணையர் தினகரன், துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் முருகேசன் ஆகியோர் பிடிபட்ட 5 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பெருங்குடியில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ரவி ராபர்ட். இவரது மனைவியின் தங்கை சுபா. இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குழந்தையை வளர்ப்பது தொடர்பாக சுபாவுக்கும் அவரது மாமனார் பன்னீர்செல்வத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சுபாவுக்கு ஆதரவாக ரவி ராபர்ட் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் பரமக்குடியை சேர்ந்த கூலிப்படை தலைவன் தினகரனிடம் ரூ.3 லட்சம் பேரம் பேசி, ரவி ராபர்ட்டை தீர்த்து கட்ட கூறியுள்ளார். இதற்காக ரூ.25 ஆயி ரம் முன்பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது. தினகரனின் ஏற்பாட்டின் பேரில் கூலிப்படையினர் குட்டி உட்பட 5 பேரும் காரில் சென்னை வந்துள்ளனர். அவர்கள் ரவி ராபர்ட் செல்லும் இடங்களை நோட்டமிட்டு தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துள்ளனர். இந்த நேரத்தில்தான் ஆய்வாளர் இளங்கோவன் அவர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளார்" என்றனர். தலைமறைவாக இருக்கும் கூலிப்படை தலைவன் தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.