

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் கடந்த 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 11 சிசுக்கள் அடுத்தடுத்து பலியாகின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் இருந்தபோதும் சிகிச்சை முறையில் நிலவும் அலட்சியம், சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் சூழலில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் விட்டது போன்றவைதான் சிசுக்கள் தொடர் மரணத்துக்குக் காரணம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது.
இந்நிலையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு 30 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தில் கருவிகள் பொருத்தும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரிவில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வென்டிலேட்டர், வாமர், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரிவு நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
இதை பார்வையிட்ட தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி கூறும்போது, ‘மாவட்டம் முழுவதும் வட்டார அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்குப் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தருமபுரியைத் தொடர்ந்து இந்த புத்துணர்வு பயிற்சி அளிக்கும் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும்’ என்றார்.