ஜெயலலிதா பிரதமராக சுதர்சன மகா யாகம்- நாகையில் அமைச்சர் ஜெயபால் நடத்தினார்

ஜெயலலிதா பிரதமராக சுதர்சன மகா யாகம்- நாகையில் அமைச்சர் ஜெயபால் நடத்தினார்
Updated on
1 min read

ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்பதற்காக நாகையில் சிறப்பு சுதர்சன மகா யாகத்தை சனிக்கிழமை நடத்தி இருக்கிறார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால்.

தேர்தல் வருகிறதென்றாலே அரசியல்வாதி கள் ஜோதிடம், பூஜை, யாகம் என்று புறப்பட்டு விடுவார்கள். அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயபால் தன்பங்குக்கு ஒரு பிரம்மாண்டமான சுதர்சன மகா யாகத்தை சனிக்கிழமை காலை நடத்தினார். ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என்பதற்காக இந்த யாகத்தை நடத்தினாராம் அமைச்சர்.

நாகப்பட்டினத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்தில் தன் மனைவி கண்ணகியுடன் கலந்து கொண்டார் அமைச்சர். கோயிலின் தலைமை பட்டாச்சாரியாரான ரெங்கராஜன் தலைமையில் சுதர்சன மகாயாகம் காலை 6.30 மணிக்கு தொடங்கியது. பத்துக்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் உடனிருந்து நடத்தப்பட்ட இந்த யாகம் மதியம் 12.30 மணி வரை நடந்தது. ``ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த யாகத்தில் அவரின் ஆளுமைத்திறன் அதிகரிக்கவும், ஆயுள் விருத்திக்கும், பாரத பிரதமராக வருவதற்கும் பிரார்த்திக்கப்பட்டது’’ என்று யாகத்தை நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

இந்த யாகத்தில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், நகர அதிமுக செயலாளர் சந்திரமோகன், நகராட்சித் தலைவி மஞ்சுளா சந்திரமோகன் உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக-வினர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஜெயபாலிடம், ``ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என்பதற்காக நீங்கள் இந்த யாகத்தை நடத்தியதாகச் சொல் கிறார்களே?’’ என்று கேட்டதற்கு, ’’அது உண்மைதான், இந்தக் கோயிலுக்கு கடந்த வாரம்தான் குடமுழுக்கு நடந்தது. முதல் நிகழ்ச்சியாக அம்மாவுக்காக இந்த யாகத்தை நடத்தி இருக்கிறோம். அம்மா அவர்கள் நீண்ட ஆயுளோடு இருந்து நாட்டை ஆளவேண்டும். தமிழக முதல்வராக இருக்கும் அவரை பாரதப் பிரதமராக ஆக்கிய பாக்கியம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த யாகத்தை நடத்தி இருக்கிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in