

மகேஸ்வரி, அன்வர் பாஷா, குமரவேலு
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 பேருக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறையில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திரதினம் என ஆண்டுக்கு இருமுறைகுடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தாண்டு தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல்விருதுகள் தமிழக காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜி மகேஸ்வரி,சென்னை புனித தோமையர்
மலை ஆயுதப்படை (3) துணை ஆணையர் அன்வர் பாஷா, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் குமரவேலு ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மெச்சத் தகுந்த பணிக்கான காவல் விருதுகள் கோவை மேற்குமண்டல ஐஜி சரவண சுந்தர், சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 5-ம் அணி தளவாய் மணிவர்ணன், சென்னை காவல் ஊர்காவல்படை கூடுதல் காவல் துணை ஆணையர் அமுல்தாஸ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் துணை கண்காணிப்பாளர் பேசில் சீனிவாசன், சென்னை தகவல் தொடர்பு துணை கண்காணிப்பாளர் தேவராஜன், திருப்பூர் மாநகரம் கே.வி.ஆர். நகர் சரகம் உதவி ஆணையர் ஜான், ஆவடி காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மணிவண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும் சென்னை தலைமை அலுவலகம் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி, ஆவடி காவல் ஆணையரக பூந்தமல்லி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கோவை சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல் ஆய்வாளர் காளீஸ்வரி, வேலூர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் விஜய், தஞ்சாவூர் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவுகாவல் ஆய்வாளர் இலக்குமணன், தாம்பரம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் ரகுநாதன், சென்னை க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுதுறை காவல் ஆய்வாளர் மோகன், திருநெல்வேலி மாநகரம், நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டி முத்துலட்சுமி, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை (1) காவல் ஆய்வாளர் ஆனந்தி, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் சந்திரா, சென்னையில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை காவல் ஆய்வாளர் செந்தில் குமார், சென்னையில் உள்ள பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் முருகன் என 21 பேருக்கு மெச்சத் தகுந்த பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.