மாநகர பஸ் டிக்கெட்டுகளால் குழப்பம்

மாநகர பஸ் டிக்கெட்டுகளால் குழப்பம்
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளில் ஊர் பெயர்கள் தப்பும் தவறுமாக இடம் பெற்றுள்ளதால், பயணிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநகரப் பேருந்துக் கழகங்களில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்குப் பதிலாக தற்போது மின்னணு கருவியின் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் பயணச்சீட்டுகளில் ஊர் பெயர்கள் தப்பும் தவறுமாக இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து, திருவள்ளூர் அடுத்த காக்களூரை சேர்ந்த ராகவேந்தி பட் என்பவர் தி இந்து’ விடம் கூறியதாவது:

“நான் கடந்த 14-ம் தேதி வியாபார விஷயமாக காக்களூரில் இருந்து திருவள்ளூருக்கு ஆவடி பணிமனையைச் சேர்ந்த மாநகரப் பேருந்தில் பயணம் செய்தேன். எனக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டில் காக்களூர் என்ற ஊர் பெயர் இடம் பெறுவதற்குப் பதிலாக `கல்லூர்’ என்ற பெயர் இடம் பெற்றிருந்தது. திரும்பி வரும்போது, அம்பத்தூர் பணிமனையைச் சேர்ந்த மாநகரப் பேருந்தில் பயணம் செய்தேன். அந்தப் பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டில், `காக்களூர்’ என்பதற்கு பதிலாக `காக்கா கண்டக்’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால், பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துநரிடம் கேட்டபோது, அவர், “இயந்திரத்தில் என்ன பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த பெயரில்தான் பயணச்சீட்டு வழங்கமுடியும்” என்றார். ஒருவேளை நான் பயணம் செய்த சமயத்தில் வழியில் டிக்கெட் பரிசோதகர்கள் நின்றிருந்தால், அவர்கள் என்னுடைய பயணச்சீட்டைக் கண்டு சந்தேகம் அடைந்திருப்பர். இதனால், தேவையில்லாத பிரச்சினை ஏற்பட்டிருக்கும்” என்றார்.

இதுகுறித்து, மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், மின்னணு டிக்கெட் வழங்கும் கருவிகளில் அனைத்து ஊர்களின் பெயர்களும் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறால் இதுபோன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனினும், குறிப்பிட்ட கருவியை பரிசோதித்து அதில் ஏற்பட்டுள்ள பழுது சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in