

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய வேலூர் மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
வேலூர் மாநகராட்சி ஆணையர் இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்தோம். வேலூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திக்கும் வித்தியாசம் உள்ளது.
நீதிபதி மற்றும் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் இருந்த கவுன்சிலர்களின் வாசகங்களை மன்றக் கூட்டத்தில் படித்ததை மேயர் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் மேயர் கூறியுள்ளார். அது போதுமானதாக இல்லை. தாம் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது உண்மையென்றால், அதுகுறித்து தகுந்த மனுதாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில், மாநகராட்சி மேயரையும் சேர்த்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுவது உகந்ததாக இருக்கும் என்று கருதுகிறோம். மேயருக்கு எதிராக குற்ற அவதூறு வழக்கில் நோட்டீஸ் அனுப்புவது குறித்து, நாங்கள் பரிசீலிக்கும் முன்பு, மேயர் தனது வருத்தத்தை வெளிப்படுத்த விரும்புகிறாரா என்பதை நாங்கள் அறிய வேண்டும்.
இந்த வழக்கில் மேயரையும் எதிர் மனுதாரராக சேர்த்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மேயருக் கான நோட்டீஸை ஆணையரின் வழக்கறிஞர் பெற்றுக் கொண்டு, மனுதாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளார்.வழக்கு விசாரணை டிசம்பர் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.