

முல்லை பெரியாறு அணையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியது. நேற்றைய நிலவரப்படி அணையில் 136.90 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. ஆனால், அணையில் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தும் நடவடிக்கைக்கு தடை போடும் முயற்சியில் கேரளம் மீண்டும் இறங்கியுள்ளது.
அணையும், 2 மதகுகளும் பலவீனமாக இருப்பதாகக் கூறி அணையில் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று பெரியாறு அணையின் மூவர் குழு மற்றும் தமிழக அரசுக்கு கேரளம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துக்கு அதிக பயன்
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் பெரியாறு தேக்கடியில் முல்லை ஆற்றில் கலக்கிறது. நல்ல மழை பெய்தால் ஆண்டுதோறும் பெரியாறு அணையில் சராசரியாக 13 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 2.13 லட்சம் ஏக்கர் விளைநிலங்களும், 73 லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும் பெரியாறு தண்ணீர் நிறைவு செய்கிறது. ஆனால், அணை நிரம்பி உபரியாக வெளியேறும் தண்ணீர் மட்டுமே கேரளத்துக்கு கிடைக்கிறது. மற்ற நேரங்களில் இந்த அணை தண்ணீரை முழுமையாக 999 ஆண்டுகளுக்கு தமிழகம் பயன்படுத்திக்கொள்ள 1886-ல் தமிழக-கேரள அரசுகள் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘புதிய அணையை கட்டுவதன் மூலம், தமிழக, கேரள ஒப்பந்தம் தானாக ரத்தாவதுடன், அணை தண்ணீரையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நோக்கில்தான், பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு அவ்வப்போது புகார் கூறி வருகிறது. மேலும், அணையில் நீர் மட்டத்தை உயர்த்தினால் தண்ணீர் கிடைப்பதில் தங்களுக்கு மேலும் தாமதமாகும். எனவேதான் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த் தக் கூடாது என்பதில் கேரளம் பிடிவாதமாக உள்ளது’ என்கிறார் முல்லை பெரியாறு அணை மீட்பு குழுவின் தலைவர் ரஞ்சித்.
இடுக்கியால் வந்த இடையூறு
பெரியாறு அணை கட்டுமானப் பணிகள் 1887-ல் தொடங்கப்பட்டு, 1895-ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 1976 வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. 1976-ல் கேரளம் இடுக்கி அணை கட்டிய பிறகு பிரச்சினை தொடங்கியது.
அதாவது, இடுக்கி அணையில் இருந்து ஆண்டுக்கு சுமார் 780 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படு கிறது. மின் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு தண்ணீர் கடலில் கலக்கிறது. பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிதண்ணீரை மட்டும் கணக்கில் கொண்டு இடுக்கி அணை கட்டப்பட்டது. எனவே, பெரி யாறு அணையில் நீர்மட்டத்தை குறைத்தால்தான், இடுக்கி அணைக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது. எனவேதான், பெரி யாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கேர ளம் பல்வேறு இடையூறுகளையும் செய்து வருகிறது என்கின்றனர் தமிழக பொதுப்பணித் துறையினர்.
அணை பலமாகவே உள்ளது
இதுகுறித்து தமிழக பொதுப் பணித் துறை உயர்அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியது:
பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியதையடுத்து, கேரள அரசானது நேற்று தமிழக அரசு மற்றும் அணையின் மூவர் குழு ஆகியோருக்கு கடிதம் அனுப்பி யுள்ளது. அதில், அணையில் நீர்மட் டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என்றும், அணையும், அணையில் உள்ள 5, 7 ஆகிய இரு மதகுகளும் பலவீனமாக இருப்ப தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் அழுத்தம், நிலஅதிர்வு ஆகியவற்றை தாங்கும் உறுதித்தன்மையுடன் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 1980 முதல் 1999 வரை 3 கட்டங்களாக ரூ. 26 கோடியில் கேரள அரசுப் பொறியாளர்கள், மத்திய நீர்வள ஆணையப் பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் பெரியாறு அணையை தமிழக அரசு பலப்படுத்தியுள்ளது.
மேலும், கேபிள் ஆங்கரிங் செய்தல், கூடுதலாக 3 மதகுகள் அமைத்தல், கான்கிரீட் முட்டுச்சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் 12 ஆயிரம் டன் எடை கூடுதலாக சேர்க்கப்பட்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளதால், அணையில் 152 அடி வரை தண்ணீரைத் தேக்க முடியும்.
மத்திய கட்டுமான தொழில்நுட்பப் பிரிவு தலைவர் டாக்டர் எஸ்.எஸ். பிரார் தலைமையிலான நிபுணர் குழு மற்றும் டாக்டர் பி.கே. மித்தல் குழு, கடற்படை கொச்சி பிரிவு மேஜர் ராஜூ குழு ஆகிய 3 குழுவினர் தனித் தனியாக ஆய்வு செய்து அளித்த அறிக்கைகளிலும் அணை பலமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மத்திய நீர்வள ஆணையமும் உறுதி செய்துதான் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பிறகுதான், அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
27.02.2006-ல் அணையில் நீர்மட் டத்தை 142 அடியாக உயர்த்தியும், அணை பாதுகாப்பு மற்றும் கண் காணிப்புக்காக மூவர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி, மூவர் குழு அமைக்கப்பட்டு அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
இந்நிலையில், கேரள மாநில தலைமைச் செயலர் பாரத் பூஷன் நேற்று பெரியாறு அணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தகவலறிந்த பெரியாறு அணை கோட்ட செயற்பொறியாளர் மாதவன் தலைமையிலான தமிழக பொதுப்பணித் துறையினர் பெரியாறு அணைக்கு விரைந்தனர்.
8114 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும்
பெரியாறு அணையில் 136 அடியில் இருந்து 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தினால், கூடுதலாக 8114 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதேவேளையில், 152 அடியாக உயர்த்தும்பட்சத்தில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக பாசன வசதி கிடைக்கும்.