

பொன்னேரி அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். 5 பெண்கள் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது மாளிவாக்கம். இங்குள்ள முனுசாமி என்பவருக்கு சொந்தமான வயலில், மாளிவாக்கத்தைச் சேர்ந்த பாண்டியன் மனைவி சந்திரா(32), மனோகர் மனைவி ரேணுகா(33) உட்பட 7 பெண்கள், நெற்பயிர்களிடையே உள்ள களையை அகற்றும் பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில், மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, வயலில் இருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியது. இதில், சந்திரா, ரேணுகா ஆகிய இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த மாளிவாக் கத்தைச் சேர்ந்த மல்லி கா(45), வள்ளி(39), சுந்தரி(30), துளசி(36), சித்ரா(32) ஆகிய ஐந்து பேரும், பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, பொன்னேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்த சந்திரா, ரேணுகா ஆகியோரின் உடல்கள் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அந்த உடல்களை, பால்வளத் துறை அமைச்சர் ரமணா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தா ருக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், “மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து, மின்னல் தாக்கி உயிரிழந்த சந்திரா, ரேணுகா ஆகிய இருவரின் குடும்பங்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க, தமிழக அரசிடமிருந்து ஆணை பெறப்பட்டு, நிவாரண நிதி வழங்கப்படும்’’ என்றார்.