

மாநிலக் கட்சிகளை ஒழிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "பாரதிய ஜனதா கட்சி, மாநிலக் கட்சிகளை ஒழிக்க முயற்சிக்கிறது. சிவசேனா கட்சியின் தலைவர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கி, அவரை இரவோடு இரவாக பாஜகவில் உறுப்பினராக இணைத்து சிவசேனா கட்சிக்கு நெருக்கடி அளித்துள்ளது.
இத்தகைய செயல் மூலம் மகாராஷ்டிரத்தில் சிவசேனாவை பலமிழக்கச் செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். இதேபோல் தமிழகத்தில் உள்ள கட்சிகளையும் ஒழிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது" என்றார்.
மேலும், நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தான் பங்கேற்கவுள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.