

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடங்கி நேற்று மாலை வரை பலத்த மழை பெய்தது. இந்நிலையில், மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது தற்போது மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைய வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனினும் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை நீடிக்கும்.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங் களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்யும். நகரின் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி, அதிகபட்ச மாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 15 செ.மீ., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் 14 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 11 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் 10 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம், செங்கல் பட்டு, தாம்பரம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பூந்த மல்லி, புழல், செங்குன்றம், ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.
மேலும் காரைக்கால், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, வேலூர், கன்னியாகுமரி, நாமக்கல், விழுப்புரம், சேலம், கரூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங் களிலும் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. சென்னை பல்கலைக்கழகத் துக்கு உட்பட்ட கல்லூரிகளில் வியாழக்கிழமை நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.