

ரிசர்வ் வங்கியின் ‘ராஜ்பாஷா’ கோப்பைக்கான போட்டியில் சென்ட்ரல் வங்கி முதல் பரிசு பெற்றுள்ளது.
மத்திய அரசின் அலுவல் மொழிக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்து வதற்காக ரிசர்வ் வங்கி சார்பில் ‘ராஜ்பாஷா’கோப்பைக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. 2012-13ம் ஆண்டில் மத்திய அலுவல் மொழிக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ‘ஏ’, ‘சி’ ஆகிய இரு பிரிவுகளில் சென்ட்ரல் வங்கி முதல் பரிசு பெற்றுள்ளது. வங்கிகளுக்குள் நடத்தப்படும் இதழ்களுக்கான போட்டியிலும் சென்ட்ரல் வங்கியின் ‘சென்ட்ரலைட்’ இருமொழி இதழ் பரிசு பெற்றுள்ளது.
இதற்கான பரிசளிப்பு விழா மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடந்த 13-ம் தேதி நடந்தது. முதல் பரிசு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை சென்ட்ரல் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரிஷியிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வழங்கினார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் முந்த்ரா, செயல் இயக்குநர் கே.கே.வோரா, சென்ட்ரல் வங்கியின் அலுவல் மொழிப் பிரிவு பொது மேலாளர் பி.ஜே.குமார், உதவி பொது மேலாளர் உஷா குப்தா ஆகியோரும் உடன் இருந்தனர்.