மறு எண்ணிக்கை அமைச்சர்- மோடி கிண்டலுக்கு ப.சிதம்பரம் பதில்

மறு எண்ணிக்கை அமைச்சர்- மோடி கிண்டலுக்கு ப.சிதம்பரம் பதில்
Updated on
1 min read

தன்னை 'மறு என்ணிக்கை அமைச்சர்' என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியது, உண்மையைச் சிதைக்கும் செயல் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "போலி என்கவுண்டரில் உண்மையைக் கொல்வதே நரேந்திர மோடியின் வழக்கம் என்று நான் ஒரு முறை கூறினேன். எத்தனை உண்மைகளை மோடி சிதைத்தார் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லியிருந்தேன். இப்போது மோடியின் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் இன்னொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.

'மறு எண்ணிக்கை அமைச்சர்' என்று என்னை மோடி கிண்டல் செய்திருக்கிறார். 2009-ல் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு முறைதான் வாக்குகள் எண்ணப்பட்டன. மறு எண்ணிக்கை நடைபெறவில்லை. இது எல்லோருக்கும் (மோடியைத் தவிர) தெரிந்த உண்மை.

இன்னும் சொல்லப்போனால், "என்னுடைய மறு எண்ணிக்கைக் கோரிக்கையைத் தேர்தல் அதிகாரி நிராகரித்தது தவறு" என்பதுதான் அதிமுக வேட்பாளரின் தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

இந்த உண்மையைத்தான் மோடி சிதைத்திருக்கிறார். இன்னும் எத்தனை உண்மைகளைச் சிதைக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதனிடையே, மோடியின் மற்றொரு விமர்சனத்துக்கு பேட்டி மூலம் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாட்டை வழிநடத்த கடுமையாக உழைக்கக் கூடிய நன்கு படித்தவர்கள்தான் தேவையே தவிர, கடின மனம் படைத்தவர்கள் அல்ல என்று பதிலடி தந்தார்.

ப.சிதம்பரம் மீது மோடி தாக்கு

முன்னதாக, வண்டலூரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பற்றி மோடி பேசும்போது, "மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர். அவர் வாக்கு எண்ணிக்கையில் தோற்றார். மறுவாக்கு எண்ணிக்கையில் ஜெயித்தார்.

மோடியின் பொருளாதார அறிவை சிறிய ஸ்டாம்பின் பின்னால் எழுதிவிடலாம் என்று அவர் கூறுகிறார். (ப.சிதம்பரத்தைப் பற்றி பலமுறை தனது பேச்சில் ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர் என்று மோடி குறிப்பிட்டார்) காங்கிரஸ் அரசை பிரபல பொருளாதார நிபுணர் வழிநடத்துகிறார்.

நிதி அமைச்சரும் தன்னை அவருக்கு சமமான பொருளாதார நிபுணர் என நினைத்துக் கொள்கிறார். அவரைவிட புத்திசாலி யாரும் இல்லை என நினைக்கிறார். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சாதாரண பள்ளியில் படித்து கடின உழைப்பால் வந்தவன். ஹார்வர்டு பல்கலைக்கழக படிப்பா அல்லது ஹார்டு வொர்க்கா (கடின உழைப்பு) என்பதை பார்த்துவிடுவோம்" என்று மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in