Published : 26 Nov 2014 11:37 AM
Last Updated : 26 Nov 2014 11:37 AM

டீசல் விலை குறைந்திருப்பதால் ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்: ராமதாஸ்

டீசல் விலை குறைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு ரயில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வுகளால் ரயில்களில் பயணம் செய்வோர் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். அடுத்தடுத்து ரயில்வேதுறை நடைமுறைப்படுத்திவரும் மறைமுகக் கட்டண உயர்வுகளின் காரணமாக வசதி படைத்தவர்கள் மட்டும் தான் ரயில்களில் பயணம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதன் விளைவாக டீசல் விலை அதிகரிக்கப்பட்டது தான் ரயில் கட்டண உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களால் டீசல் விலை குறைந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதிக்கு பிறகு மட்டும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.08 குறைந்துள்ளது. டீசல் விலைக்கேற்றவாறு ரயில் கட்டணங்களை மாற்றி அமைக்கும் முறைப்படி கடந்த மே 16 ஆம் தேதி கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 மாதத்தில் அதாவது கடந்த நவம்பர் 16 ஆம் தேதிக்குள் டீசல் விலை வீழ்ச்சியைக் காரணம் காட்டி ரயில் கட்டணம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை தொடர்வண்டிக் கட்டணங்களைக் குறைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

கட்டண நிர்ணய ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி கட்டணக் குறைப்பு மறுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், கட்டண நிர்ணய ஆணையம் அமைக்கப்படாத நிலையில், டீசல் விலை உயர்ந்துவிட்டதாகக் கூறி கடந்த மே மாதம் தொடர்வண்டி வாரியம் தன்னிச்சையாக கட்டண உயர்வை அறிவித்தது. அதேபோல், இப்போதும் டீசல் விலை குறைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு ரயில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தட்கல் முன்பதிவு இருக்கைகளுக்கு அறிவிக்கப்பட்ட மறைமுகக் கட்டண உயர்வையும் ரத்து செய்ய வேண்டும்; டைனமிக் கட்டண நிர்ணய முறையில் கூடுதல் கட்டணங்களுடன் இயக்கப்படும் பிரீமியம் தொடர்வண்டிகளுக்கு மாற்றாக சாதாரண கட்டணத்திலான தொடர்வண்டிகளை இயக்க தொடர்வண்டித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x