

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பட்டதை கண்டித்து, நாளை (செவ்வாய்க்கிழமை) மனிதநேய மக்கள் கட்சி, சென்னை நுங்கம்பாகக்த்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீத் வெளியிட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீது போதை மருந்து கடத்தியதாக பொய்க்குற்றம் சுமத்தி அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து தமிழகமெங்கும் கொந்தளிப்பு நிலவுகிறது.
இதனிடையே தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மனிதநேய மக்கள் கட்சி நாளை (4.11.2014) மதியம் 3:30 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
இதில் மமக பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, மமக சட்டமன்ற குழு தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாநில அமைப்புச் செயலாளர் மன்னை செல்லசாமி மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.