

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 9-ம் தேதி (நாளை) சென்னை, மன்னார்குடி, தூத்துக்குடி, கரூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப் டக்கூடும் எனக் கூறி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனை எதிர்த்து துரை சங்கர், எஸ்.சிவராமன், எஸ்.டி.சந்தோஷம் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் பேரணி மற்றும் பொதுக் கூட்டத் துக்கு அனுமதி வழங்கும்படி காவல் துறையினருக்கு நேற்று உத்தரவிட்டார்.
"ஏற்கெனவே பல்வேறு அமைப்பினரின் பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினருக்கு மட்டும் காவல் துறையினர் அனுமதி மறுக்க முடியாது. ஆகவே, ஏற்றுக் கொள்ளக் கூடிய கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கிட வேண்டும்" என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.