Published : 27 Nov 2014 12:48 PM
Last Updated : 27 Nov 2014 12:48 PM

உலகிலேயே சிறந்தது உதகை ரோஜா பூங்கா: ரோஜா சம்மேளனத் தலைவர் புகழாரம்

உலகின் தலைசிறந்த பூங்காக்களில் ஒன்றாக உதகை ரோஜா பூங்கா திகழ்கிறது என உலக ரோஜா சம்மேளனத் தலைவர் ஸ்டீவ் ஜோன்ஸ் புகழாரம் சூட்டினார்.

உதகை தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டு நினைவை முன்னிட்டு, கடந்த 1995-ம் ஆண்டு, 10 ஏக்கர் பரப்பில் உதகை ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. தற்போது, 4 ஆயிரம் ரகங்களில், 40 ஆயிரம் செடிகள் பராமரிக்கப்படுகின்றன. கடந்த 2006-ம் ஆண்டு ஜப்பான் சர்வதேச ரோஜா மாநாட்டில் இப்பூங்கா, தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த பூங்காவாகத் தேர்வு செய்யப்பட்டது.

இப்பூங்காவில் ஒரே இடத்தில் பல்வேறு வண்ண 40 ஆயிரம் ரோஜா செடிகள் பூத்துக்குலுங்குவதைப் பார்வையிட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் சர்தேச ரோஜா சம்மேளன மாநாடு நாளை (நவ.28) நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச ரோஜா சம்மேளனத் தலைவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் ஜோன்ஸ் தலைமையில் பல நாடுகளைச் சேர்ந்த 250 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவர்கள் உதகையில் உள்ள ரோஜா பூங்காவை நேற்று ஆய்வு செய்தனர். ஸ்டீவ் ஜோன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘உலகிலேயே தனித்தன்மையுடன் உதகை ரோஜா பூங்கா விளங்கு கிறது. உலகில் தலைசிறந்த பூங்காக்களில் முதல் 100 இடங்களில் இந்த பூங்கா இடம்பெறும். இங்கு அனைத்து ரோஜா செடிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும்’ என்றார். தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் மணி, நீலகிரி ரோஜா சம்மேளனத் தலைவர் கிருஷ்ணகுமார் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x