

சிங்கப்பூரில் இருந்து 2.5 கிலோ தங்கக் கட்டிகளை கருப்பு சாயம் பூசி கடத்தியவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பினர்.
அப்போது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (23) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி, அவரது கைப்பையை திறந்து பார்த்தனர். அதில், கருப்பு சாயம் பூசப்பட்ட 5 கட்டிகள் இருந்தன. அவை அனைத்தும் தங்கக் கட்டிகள். தங்கம் என்று தெரியாதபடி கருப்பு சாயம் பூசப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப் பட்டார். அவரிடம் இருந்து தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டன.
2.5 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளின் சர்வதேச மதிப்பு ரூ.75 லட்சம் என அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.