

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையில் கூறியதாவது:
நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் ‘ஜன் தன்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்க வளசரவாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்குச் சென்றேன். அடையாளம் மற்றும் முகவரிச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுத்தேன். அதை ஏற்க மறுத்து ஆதார் அட்டை கேட்டார்கள். என்னிடம் இல்லை என்றேன்.
ஆதார் அட்டை இருந்தால்தான் வங்கிக் கணக்கு தொடங்க முடியும். இல்லாவிட்டால், ஸ்டேட் வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கலாம் என்று கூறிவிட்டனர்.
இவ்வாறு தண்டபாணி கூறினார்.
இதுகுறித்து கேட்டபோது வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
மேற்கண்ட நபர் வங்கியில் யாரிடம் கேட்டார் எனத் தெரியவில்லை. ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்க வருபவர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும் என நாங்கள் நிர்பந்திப்பது இல்லை. அது மட்டுமின்றி, வேறு வங்கிகளுக்குச் செல்லுமாறு யாரையும் திருப்பி அனுப்புவதும் இல்லை’’ என்று விளக்கம் அளித்தனர்.