

2016 மார்ச் மாதத்திற்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என, தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஜப்பான் நாட்டில் உள்ள கனகவா மாகாண அரசு சார்பில், அங்குள்ள தொழில்வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பு, ஜப்பான் வெளியுறவு தொழில் அமைப்பு (ஜெட்ரோ) மற்றும் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில், தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
தமிழகமும், ஜப்பானும் உறுதியான பொருளாதார மற்றும் கலாச்சார உறவை கொண்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யும் நான்காவது பெரிய நாடாக ஜப்பான் திகழ்கிறது. கடந்த ஏப்ரல் 2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 17.2 பில்லியன் டாலர் அளவுக்கு ஜப்பான் நாடு தமிழகத் தில் முதலீடு செய்துள்ளது. அத்து டன், இந்தியாவில் முதலீடு செய்வ தில் அதிக ஆர்வம் செலுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன.
தொழில் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மூன்றாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள், எலக்ட் ரானிக், ஹார்டுவேர், பொறியியல், தோல் மற்றும் ஜவுளித் துறை உற்பத்தியில் தமிழகம் மிகப் பெரிய மையமாக திகழ்கிறது.
சர்வதேச அளவில் ஆட்டோ மொபைல் உற்பத்தி செய்யும் சிறந்த 10 இடங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.52,379 கோடி மதிப்பிலான 76 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் 2016 மார்ச் மாதத்துக்குள் ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.