

காஞ்சிபுரம் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களின் புகைப்படங்களை போலீஸார் நேற்று வெளியிட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கொள்ளையடிக்கும் நோக்குடன் கடந்த 1-ம் தேதி இரவு கதவுகளை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ. 17 கோடி மதிப்புள்ள அடகு நகைகள் மற்றும் ரூ. 8 லட்சம் ரொக்கம் தப்பின. இதுகுறித்து, கூட்டுறவு சங்கச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், காஞ்சி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை முயற்சி நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் உருவங்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.
எனினும், கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததும் சிசிடிவி கேமராவை உடைத்துள்ளனர். இதனால், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் உருவங்களை துல்லியமாக கண்டறிய முடியாமல் போனது.
எனினும், அவர்கள் நுழைந்தது முதல் கேமராவை உடைப்பது வரையில் பதிவான உருவங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதில் கதவுகளை உடைத்து உள்ளே நுழையும் முகத்தை பாதி மறைத்திருந்த மர்மநபர் நடந்து வருவதும் பின்னர் சிசிடிவி கேமராவை உடைப்பதும் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சிகளை ஆதரமாகக் கொண்டு, கொள்ளையர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, போலீஸ் வட்டராங்கள் தெரிவித்துள்ளன.