

வைகை, கிருமால் நதிகளில் கலக்கும் மாசு குறித்து உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.
வைகை ஆறு, கிருதுமால் ஆற்று பகுதிகளில் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை நீர் கலந்து மாசு ஏற்படுகிறது. இதை தடுக்கக்கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதன் பேரில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் இணை தலைமை பொறியாளர் காந்திமதிநாதன், எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
காந்திமதிநாதன் தலைமையிலான குழு 3 நாட்கள் தேனியில் தொடங்கி, திண்டுக்கல், மதுரை வரையுள்ள பகுதிகளில் கழிவுகள் ஆற்றில் எந்தெந்த இடங்களில் கலக்கிறது என ஆய்வு செய்தது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. இது குறித்து மதுரையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணி, வருவாய், வேளாண், சுகாதாரத் துறையினர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மதுரை மாநகராட்சி அதிகாரிகள், வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் கேகே.ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கழிவுகள் கலக்கும் இடங்களில் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும், அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.