Last Updated : 06 Nov, 2014 02:31 PM

 

Published : 06 Nov 2014 02:31 PM
Last Updated : 06 Nov 2014 02:31 PM

ஐவர் தூக்கு விவகாரம்: 13 கடலோர மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை விதித்ததைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். பின்னர் போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் யாழ்பாணத்தை சேர்ந்த மூன்று மீனவர்களையும் சேர்த்து 8 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தீவிரமாகும் மீனவப் போராட்டங்கள்

இந்தத் தீர்ப்பை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டமும், பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களையும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, 13 தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினர்.

ராமேசுவரம் தீவு தங்கச்சிமடத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தங்கச்சிமடம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை, மானாமதுரை சட்டமன்ற உறுப்பனிர் குணசேகரன், மீனவப் பிரநிதிகள் ராயப்பன், அருள், சேசு, எம்ரிட், சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், 'இலங்கை உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு அளித்திருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், இலங்கை கடற்படையினரால் கடந்த 5 மாதங்களில் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், யாழ்பாணம் சிறையில் உள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இந்திய - இலங்கை இருநாட்டு மீனவ பிரச்சினைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்சினை குறித்து தமது நிலைப்பாட்டை அறிவித்து, இலங்கை அரசுக்கு மீனவர்ளின் தூக்குத் தண்டனையை நிறுத்த நெருக்குதல் கொடுக்க தவறினால் நவம்பர் 7-ஆம் தேதி தமிழகம் மீனவப் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டத்தை ராமேசுவரத்தில் கூட்டி, நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்படும் என இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவப் பிரநிதிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

7-வது நாளாக வேலைநிறுத்தம்

ஏழாவது நாளாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் 30 கோடி ரூபாய்குக்கும் மேல் இதனால் அந்நிய செலவாணி இழப்பும் ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கண்டிக்காதது ஏன்?

தங்கச்சிமடத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய மீனவப் பிரதிநிதிகள், ''ராமேசுவரம் தீவு தங்கச்சிமடத்தை பூர்வீகமாக கொண்டவர் இயக்குநர் சந்திரசேகர். இவர் மீனவ சமுதாயத்தை சார்ந்தவர். சந்திரசேகர், பாடகி ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகனான நடிகர் விஜய் ஜோசப் ஏன் இன்னும் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் விதித்துள்ள தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x