

எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் ரூ.1,270 கோடி செலவில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்க மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அடிக்கல் நாட்டினார்.
எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் ரூ.1,270 கோடி செலவில் அதானி எண்ணூர் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, துறைமுகத்தில் உள்ள கப்பல் தளங்களை பார்வையிட்டார். அதிகாரிகளிடம் துறைமுகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். அதையடுத்து துறைமுகப் பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
பின்னர், 2013-14 நிதியாண்டின் இந்திய அரசுக்கான ஈவுத்தொகை ரூ.62 கோடியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், காமராஜர் துறைமுகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார் வழங்கினார். அப்போது துறைமுக இயக்குநர் (செயலாக்கம்) சஞ்சய் குமார் உடனிருந்தார்.
சரக்குப் பெட்டக முனையத்தின் சிறப்பு அம்சங்கள்
இந்த சரக்குப் பெட்டக முனையம், 20 அடி நீளம் கொண்ட 14 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் திறன் கொண்டது. சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் மிகப் பெரிய கப்பல்களை கையாளும் விதமாக 14 மீட்டர் ஆழம் கொண்ட 730 மீட்டர் நீள கப்பல் தளம் இரு கட்டங்களாக கட்டப்படும். முதற்கட்டப் பணிகள் 27 மாதங்களில் முடிக்கப்படும். இருப்பினும் ஜூன் 2016-ல் பயன்பாட்டுக்கு வரும். சரக்குப் பெட்டகங்களை கையாள 36.5 ஹெக்டேர் நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்துக்கு ரயில் இணைப்பு பாதைகளும், அகழ்வு பணிகளும் விரைவில் செய்யப்பட உள்ளன.