Published : 28 Nov 2014 02:23 PM
Last Updated : 28 Nov 2014 02:23 PM

சமையல் எரிவாயு நேரடி மானியம்: குளறுபடி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

சமையல் எரிவாயுக்கு நேரடி மானியம் வழங்குவதில் நிலவும் குளறுபடிகளை நீக்கி, கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப நிர்ணயிக்கும் வழிகாட்டுதல் உருவாக்கி அமல்படுத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி யுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக மத்திய அரசு மானியம் செலுத் தும் திட்டம், நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமலுக்குவந்துள்ளது. தமிழகத்தில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள் ளது.

இதுகுறித்து, கடந்த ஜூன் 3ம் தேதி, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில், தமிழக அரசு ஏற்கெனவே கல்வி உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் தொகையை, வங்கிகள் வழியே நேரடியாக வழங்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மத்திய அரசிலி ருந்து மண்ணெண்ணெய் மற்றும் உர மானியத்துக்கு மானியம் வழங்கும் திட்டத்தில், நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தை தமிழக அரசு எதிர்த்துள்ளது. ஏனெனில், மானியம் என்பது குறிப்பிட்ட தொகையில் மட்டுமல்ல, குறிப்பிட்ட நேரத்துக்கு பொருள் கிடைப்பதை உறுதி செய்வதாகும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எங்கள் கோரிக்கையை ஏற்று, சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்துக்கு ஆதார் எண் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

எரிவாயு சிலிண்டர் வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசின் நிறுவனமாகும். எனவே, மாநில அரசின் கருத்து களைக் கேட்டு, மத்திய அரசு எளிதான நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

தற்போது வங்கிகள் மூலம் நேரடியாக வாடிக்கையாளர் களுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள் ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கிராமப் பகுதிகளில் வங்கிகள் இல்லாத நிலையே உள்ளது. எனவே, மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டுறவு வங்கி கள், மத்திய அரசின் தபால் அலுவலகங்கள் மற்றும் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் மூலம், மானியம் வழங்கும் முறையை மத்திய அரசு தேர்ந்தெடுக்கலாம்.

தமிழக அரசின் முதியோர் ஓய்வூ தியத் தொகையை, அவரவர் வீடுகளுக்கு நேரடியாக வழங்குவதில், வங்கிகள் சரியான அமைப்பாக இல்லை என்பதால், தபால் அலுவலகங்கள் மூலம் இந்தப் பணியை மேற்கொள்கிறது. எனவே, மத்திய அரசும் எளிதாகத் தபால் அலுவலகங்கள் மூலம் வழங்கலாம். மேலும், அனைத்து கிராமங்களிலும் வங்கி வசதி இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மானியத் தொகை எவ்வளவு என்பதை நிர்ணயிப்பதில், மத்திய அரசு தெளிவான வழிகாட்டு தல் அளிக்கவில்லை. சர்வதேச கச்சா எண்ணை விலையின் அன்றாட சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் எரிவாயு விலை மாறும். எனவே, எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங் கள் உயர்த்தும்போது, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நிரந்தர மானியத் தொகையைப் பெற்றால், வாடிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே, கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, வாடிக்கையாளர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய மானியத் தொகையை, உரிய வழி காட்டுதலுடன் நிர்ணயிக்க வேண்டும். தமிழக அரசின் இந்தக் கருத்துகளை உரிய முறையில் பரிசீலித்து, மத்திய அரசு நேரடி மானியத் திட்டத்தை அமல்படுத்தும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x