வாக்களிக்காத ஆயிரக்கணக்கான தென்மாவட்ட இளைஞர்கள்: ஒரேநாளில் ஊர்போய் திரும்ப முடியாததால் சென்னையிலேயே இருந்துவிட்டனர்

வாக்களிக்காத ஆயிரக்கணக்கான தென்மாவட்ட இளைஞர்கள்: ஒரேநாளில் ஊர்போய் திரும்ப முடியாததால் சென்னையிலேயே இருந்துவிட்டனர்
Updated on
2 min read

ஒரேநாளில் ஊருக்குப் போய்விட்டு திரும்ப முடியாது என்பதால் சென்னையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தென்மாவட்ட இளைஞர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதுபோல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திலும், பெரிய கட்டுமான நிறுவனங்களிலும் பணிபுரியும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும் தங்கள் மாநிலங்களுக்கு வாக்களிக்கச் செல்லவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக அரசு - தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, வியாழக்கிழமை அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத் துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது.

ஆனால், பல்லாயிரக்கணக் கான தென்மாவட்ட இளைஞர் களும், வடமாநில இளைஞர்களும் ஒரேநாளில் ஊருக்குப் போய் வாக்களித்துவிட்டு சென்னை திரும்ப முடியாது என்பதால் இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எப்படியாவது ஊருக்குப் போய் வாக்களிக்க வேண்டும் என்று விரும்பிய ஏராளமான பேருக்கு ரயில் மற்றும் பஸ்களில் டிக்கெட் கிடைக்கவில்லை. கோடை விடுமுறை என்பதால் எல்லா ரயில்களும் “ஹவுஸ்புல்”. இதைக் கருத்தில் கொண்டு வெகுசிலர் மட்டுமே முன்கூட்டியே திட்டமிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து ஊருக்குப் போய் வாக்களித்துள்ளனர்.

“சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரயிலில் செல்ல 12 மணி நேரமும், பஸ்ஸில் சென்றால் 11 மணி நேரமும் ஆகும் என்பதால் ஊருக்குப் போய்வருவதற்கே ஏறத்தாழ 24 மணி நேரமாகிவிடும். அதனால் வாக்களிக்க தனது சொந்த ஊரான பரமன்குறிச்சிக்குப் போக வில்லை” என்கிறார் தனியார் பேரங் காடியில் பணிபுரியும் இளைஞர் ராம்குமார். இதே காரணத்துக் காகத்தான் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராள மான இளைஞர்கள் வாக்களிக்க ஊருக்குப் போகவில்லை.

“தென்மாவட்ட இளைஞர் களுக்கே இந்த நிலையென்றால், வடமாநிலத்து இளைஞர்களின் நிலையைச் சொல்ல வேண்டிய தில்லை. அவர்கள் ஊருக்குப் போய்வர சில நாட்கள் ஆகும் என்பதால் ஊருக்குப் போவது பற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை” என்கிறார் கட்டுமானப் பொறியாளர் வெங்கடாசலம்.

“வாக்களிக்க ஊருக்குப் போய்விட்டு சென்னை திரும்ப 2 நாட்கள் ஆகும். ஒருநாள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுமுறை. அடுத்த நாள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்வார்கள். என்னைப் பொருத்தவரை ஒருநாள் சம்பளம் என்பது மிகப்பெரிய விஷயம். அதனால்தான் ஊருக்குப் போகவில்லை” என்கிறார் விருதுநகர் மாவட்டம், சொக்கநாதன்புதூரைச் சேர்ந்த இளைஞர் செல்வராஜ்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களைப் பொருத்த அளவில் விடுமுறை எடுப்பதில் பிரச்சினை இருக்காது. சம்பளப் பிடித்தம் என்ற பேச்சுக்கும் இடமில்லை. ஆனால், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நிலைமை தலைகீழ்.

இனிவரும் பொதுத் தேர்தல் களில், தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் வாக்க ளித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கூடுதலாக ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தனியார் நிறுவன உரிமையாளர்கள் முன்வர வேண்டும். அந்த மனமாற்றம்தான் தேர்தல் ஆணையத்தின் “100 சதவீத வாக்குப்பதிவு” என்ற இலக்கினை எட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in