

புதிய மற்றும் இளம் எழுத்தாளர் களின் சிறந்த தமிழ் இலக்கியப் படைப்புகளை பதிப்பித்து, வெளியிட்டு, விற்பனை செய்வதற் காக “எழுத்து” என்ற தமிழ் இலக்கிய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறி யுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் சென்னையில் நேற்று நிருபர் களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் தமிழ் நூல்கள் வெளிவருவது மிகவும் குறைவாக உள்ளது. புதிய மற்றும் இளம் எழுத்தாளர்கள் தங்களது முதல் நூலை பதிப்பித்து, வெளியிட சிரமப்படுகிறார்கள்.
சுமார் ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் புதிய எழுத்தாளர் ஒருவர் தனது நூலின் 600 பிரதிகளை விற்பதற்குகூட தலைகீழாக நிற்க வேண்டியுள்ளது. இந்த நிலை, தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நல்லதல்ல.
எனவே, புதிய, இளம் எழுத் தாளர்களை ஊக்குவிப்பதற்காக “எழுத்து” என்ற தமிழ் இலக்கிய அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளேன். முனைவர் அவ்வை நடராஜன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் இந்த அமைப்பின் அறங்காவலர்களாக உள்ளனர்.
லாப, நஷ்டம் எங்களது நோக்க மல்ல. புதிய படைப்பாளிகளின் சிறந்த தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடுவது மட்டுமே நோக்கமாகும். புதிய மற்றும் இளம் எழுத்தாளர்கள் தங்களது படைப்பிலக்கியத்தின் (நாவல், சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு) இரண்டு பிரதிகளை, கையெழுத்துப் பிரதியாகவோ அல்லது தட்டச்சுப் பிரதியாகவோ அனுப்ப வேண்டும். நடுவர் குழு, தகுதியான நூலைத் தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தமிழ் இலக்கிய படைப்பை பதிப்பித்து, அச்சிட்டு, விற்பனை செய்வதற்கான அனைத்து செலவுகளையும் அமைப்பே ஏற்கும். நூலுக்கான உரிமைத் தொகை (ராயல்டி) முழுவதும் நூல் ஆசிரியருக்கே போய்ச்சேரும்.
“எழுத்து” தமிழ் இலக்கிய அமைப்பின் தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டை எம்.சி.டி.எம். சிதம்பரம் மேல்நிலைப் பள்ளியில் நவ.3-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
சுயசரிதை எழுதவிருக்கிறீர் களா என்று நிருபர்கள் கேட்ட தற்கு, ‘‘சுயசரிதை எழுதும் அளவுக்கு எனக்கு இன்னும் வயதாக வில்லை’’ என்றார் சிதம்பரம். “எழுத்து” அமைப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28270931, 9841440410 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.