

நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற உள்ள சந்தனக்கூடு விழாவுக்காக தயார் செய்யப்பட்டு வந்த கூடுக்கு தீவைத்த மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகூர் ஆண்டவர் தர்காவில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள சந்தனக்கூடு விழாவிற்காக நாகப்பட்டினம் ஜமாத்தினரால் கூடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அபிராமி அம்மன் கோயில் திடல் அருகே தயாரிக்கப்படும் இந்த கூட்டிற்குள் தான் சந்தனம் வைக்கப்பட்டு ஊர்வ லமாக நாகூருக்கு எடுத்துச் செல்லப்படும். ஐம்பது சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கூட்டில் திடீரென தீப்பற்றியது. அதனை நாகப்பட்டினம் தீயனைப்பு துறையினர் அணைத்தனர்.
விசாரணையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது அஸ்டின், முகமது அப்துல்காதர் மற்றும் நாகூரைச் சேர்ந்த முஸ்தபாகமால் ஆகிய மூவரையும் சந்தன கூடுக்கு தீவைத்ததாக கைது செய்து நாகப்பட்டினம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை மாலை போலீஸார் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.