

தொட்டில் கயிற்றில் கழுத்து இறுகி 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, வில்லிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் வசிப்பவர் நாகராஜ். ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் தாரணி (12). வீட்டருகே உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார்.
தன்னுடைய மூத்த சகோதரியின் கைக்குழந்தை தூங்குவதற்காக வீட்டில் தொட்டில் கட்டியிருந்தார் நாகராஜ். திங்கள்கிழமை மாலை நாகராஜின் சகோதரி ஊருக்குச் சென்றபிறகும் வீட்டில் கட்டப்பட்ட தொட்டில் அவிழ்க்கப்படவில்லை.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் தாரணியும் பக்கத்து வீட்டுச் சிறுவர்களும் தொட்டிலை சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு, தாரணியின் கழுத்தில் சுற்றி இறுக்க, சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் தாரணியை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ராஜமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.