

துப்பாக்கி முனையில் மிரட்டி டாக்டரிடம் இருந்து 74 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வீட்டு வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டார். அவரது கணவர் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் மருத்துவர் ஆனந்தன் (55). இவரது வீட்டில் தூரத்து உறவினரான மீனா என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மீனாவின் கணவர் இம்ரான் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பணிபுரிந்து வருகிறார். டாக்டர் ஆனந்தன் வீட்டில் பணம், நகைகள் உள்ள விவரங்களை மீனா அறிந்து வைத்திருந்தார். இதுகுறித்து, அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை இம்ரான் தனது நண்பர் ஒரு வருடன் துப்பாக்கியுடன் டாக்டர் ஆனந்தனின் வீட்டிற்கு வந்தார். வீட்டில் ஆனந்தன், அவரது தாய், மனைவி ஆகியோர் இருந்தனர். இம்ரானும் அவரது நண்பரும் சேர்ந்து துப்பாக்கி முனையில் 3 பேரையும் கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த 74 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் பணம் ஆகியவற்றை கொள் ளையடித்துச் சென்றார்.
இதுகுறித்து ஆனந்தன் அண்ணாநகர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் மீனாவை கைது செய்தனர். ஆனால், அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் ஏதும் இல்லை. இதையடுத்து, போலீஸார் மீனாவின் கணவர் இம்ரான் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம், அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.