Last Updated : 14 Jul, 2019 10:00 AM

 

Published : 14 Jul 2019 10:00 AM
Last Updated : 14 Jul 2019 10:00 AM

லட்சியத்துடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!- `மில்கி மிஸ்ட்’ நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார்

மாலை அணிந்து, விரதமிருந்து கடவுளை தரிசனம் செய்யப் போகிறவர்களுக்குகூட தடைகள் வரத்தான் செய்யும். ஆனால், அந்தத் தடைகளை ஏற்றுக்கொள்வதே  உண்மையான பக்தி. தொழிலையும், அதே அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். எல்லா தடைகளையும் கடந்து, முழு ஈடுபாட்டுடன் உழைக்கிறபோதுதான் வெற்றி  கிடைக்கிறது” என்கிற மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார், தெளிவான சிந்தனை,  தீர்க்கமான செயல்களுடன் அந்நிறுவனத்தை வளர்த்தெடுக்கிறார்.

“நான் பால் சார்ந்த தொழிலில் ஈடுபடத் தொடங்கிய பிறகு ஈரோட்டில் 45-க்கும் அதிகமானோர் அதே தொழிலில் இருந்தனர்.  எங்களுக்கு என்று தனியாக ஒரு சங்கமே இருந்தது. இப்போது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே நிலைத்து நிற்கிறோம். புதிதாக வருபவர்கள் சில ஆண்டுகளில், இந்தத் தொழில் நமக்கு ஒத்துவராது என்று விலகிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு உடல் உழைப்பு தேவைப்படுகிற தொழில்.

பெங்களூருவுக்கு பால் சப்ளை!

ஈரோடு அருகில் உள்ள  தயிர்பாளையம் என்கிற கிராமத்தில் விவசாயம் செய்து வந்த அப்பா, வருமானத்தைப் பெருக்க பால் வியாபாரம் தொடங்கினார்.  வீடுகளுக்கோ, டீக்கடைகளுக்கோ பால் விற்பனை செய்யாமல், பெங்களூருவில் தயிர், மோர், வெண்ணெய்  போன்ற பால் சார்ந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறவர்களுக்கு பால் சப்ளை செய்தார்.பால்காரர்களிடமிருந்து 40 லிட்டர் கேனில் பால் வாங்கி, வேன்கள் மூலம் தினமும்  பெங்களூருவுக்கு அனுப்புவது சாகசம் நிறைந்த வேலை.

படிப்பை நிறுத்திய `ஆங்கிலம்’

சின்ன வயதிலிருந்தே, பால் விற்பனையில் அப்பா செய்கிற சாகசத்தைக் கவனித்து வளர்ந்தேன்.  ஒண்ணாம் வகுப்பிலிருந்து, 5-ம்  வகுப்புவரை தமிழ் மீடியத்தில் படித்த என்னை, ஆறாம் வகுப்பில் தனியார் ஆங்கில வகுப்பில் சேர்த்து விட்டனர்.  அதுவரை வகுப்பில் நன்றாகப் படித்துக் கொண்டிருந்த நான், ஆறாம் வகுப்பிலிருந்து கடைசி மாணவனாக மாறினேன். ஆங்கிலத்தில் என்னால் படிக்க முடியவில்லை.

இதனால், பள்ளியில் படிக்கும்போதே, படிப்பை நிறுத்திவிட்டு நானும் பால் வியாபாரத்தில் பங்கேற்கிறேன் என்று வீட்டில் கூறினேன். விருப்பம் இல்லாத கல்வியை திணிக்கவோ, விருப்பமான தொழிலில் ஈடுபடுவதை தடுக்கவோ எங்கள் வீட்டில் யாரும் முயற்சிக்கவில்லை. என் விருப்பத்தை மதித்து,  சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர்.

நெருப்புடன் விளையாடும் தொழில்!

பால் வியாபாரம் என்பது நெருப்புடன்  விளையாடும் தொழில் என்றே  கூறலாம்.  அதிகமாக உழைத்தாலும், குறைவான லாபமே கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுப்பதும் சிரமம். ஒரு நாள் பால் கெட்டுப்போனாலும், ஒரு மாத உழைப்பு வீணாகிவிடும். விடுமுறை எடுக்கவே முடியாது. இப்படி பல நெருக்கடிகளைக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலின் தன்மை, 1990-களில் மாறத்தொடங்கியது.

தொழில்நுட்ப உதவியுடன் பாக்கெட்டில் அடைத்து பாலை விற்பனை செய்யத்  தொடங்கினர். வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தங்களுடைய பொருளை  குளிர்ச்சியுடன் வழங்க, குளிர்சாதனப் பெட்டியை கடைகளுக்கு இலவசமாக வழங்கினர். வெயிலில் இருந்தால் கெட்டுவிடக்கூடிய பால், குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்புடன் விற்பனையானது. சாதாரண பெட்டிக் கடையில் குளிர்சாதனப்  பெட்டியை வைத்தபிறகு, பாலில் இருந்து எடுக்கப்படும் பொருட்களின் உற்பத்தியும் பலமடங்கு பெருக ஆரம்பித்தது.

`பனீர்’  பயன்பாடு!

தயிர், மோர், வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பால் சார்ந்த பொருட்களை தென்னிந்தியர்கள் பயன்படுத்தினாலும், வட இந்தியர்கள் அன்றாட உணவில் பயன்படுத்தும் ‘பனீர்’ பயன்பாடு நம்மிடம் இல்லை. வடஇந்திய மாநிலங்களில், பாலாடை கட்டிகளைப் போன்ற தோற்றமுடைய ‘பனீர்’,  குடிசைத் தொழிலைப்போல வீட்டுக்கு வீடு தயாரிக்கப்படும்.  கோதுமை ரொட்டிகளுக்கு பனீர் பயன்படுத்தி நிறைய கிரேவி வகைகளை செய்வார்கள்.

தற்போது ஒரு சிறு நகரில் இருக்கிற சாதாரண ஹோட்டலில்கூட வட இந்திய உணவுகள்  கிடைக்கின்றன. பாலக் பனீர், பனீர் பட்டர் மசாலா, தந்தூரி பனீர் என விதவிதமான பனீர் வகை உணவு கிடைக்கிறது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே பனீர்  உணவு வகைகள் விற்பனைக்குக் கிடைக்கும்.

அப்பாவிடம் பால் வாங்கும் பெங்களூரு  வாடிக்கையாளர்கள் சிலர் மூலம், பாலில் இருந்து பனீர் தயாரிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பால் வியாபாரத்தில் இருந்த ரிஸ்க், என்னை பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தத்  தூண்டியது. 17 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்கும் போகாமல், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற துணிச்சல் எனக்குள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.  ஈரோட்டில் பால் வியாபாரிகளிடம் பாலை வாங்கி,  அதே நாளில் பெங்களூருவுக்கு கெடாமல் அனுப்புகிற சவாலைவிட, பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து, மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், வேலை குறைவாகவும், லாபம் கூடுதலாகவும் கிடைக்கும் என்று தோன்றியது.

பனீர் தயாரிப்பு பற்றி கேள்விப்பட்டிருந்த நான், 300 லிட்டர் பாலில் ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொண்டேன்.  தொழில்முனைவோராக நானே எடுத்த முதல்  சோதனை முயற்சி அது.

வீணானது 300 லிட்டர் பால்!

பாலில் இருந்து பனீர் தயாரிப்பது தொடர்பாக யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. புத்தக ரெசிபி பார்த்து சமைக்க முயற்சிப்பதுபோல, பனீர் தயாரிப்பு பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு தயாரித்தேன். 300 லிட்டர் பாலை நான் வீணாக்கிவிட்டதாக அப்பாவுக்கு ஆரம்பத்தில் வருத்தமே இருந்தது. எதிர்பார்த்தபடி பனீர் வராமல் போனாலும், தொடர்ந்து என்னால் பனீர் உற்பத்தி செய்யமுடியும் என்கிற நம்பிக்கை கிடைத்தது. தவறுகளில் இருந்துதான் நாம் எதையுமே கற்றுக்கொள்ள முடியும். அதனால், பரிசோதனை முயற்சிகளில் எனக்கு தணியாத ஆர்வம் உண்டு. இதுதான் மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள துணையாக இருக்கிறது.

தரமான பனீர் கிடைக்குமா?

1995 முதல் நேரடி பால் விற்பனையில் இருந்து  பனீர் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கினேன். நாங்கள் பால் சப்ளை செய்த ஹோட்டல்களுக்கு நானே நேரில் சென்று,  மார்க்கெட்டிங் செய்தேன். தரமான பனீர்  தொடர்ந்து கிடைப்பதில்லை என்கிற கள நிலவரத்தை அறிய முடிந்தது.

குடிசைத் தொழிலைப்போல பனீர் உற்பத்தி செய்பவர் களால், ஒரே தரத்தில் எப்போதும் தயாரிக்க முடியவில்லை. அந்த இடைவெளியை நிரப்பினால், நல்ல எதிர்காலம் இருப்பதை உணர முடிந்தது. ஒரே தரத்தில் பனீர்

உற்பத்தி செய்யும் லட்சியத்தோடு,  என் தேடலைத் தொடங்கினேன்.

ஆராய்ச்சியும்... நவீன இயந்திரங்களும்...

நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி, மூலப்பொருளாக இருக்கும் பாலை, முறையாகப் பதப்படுத்தினால் ஒரே தரத்தில் பனீர் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், அதிக முதலீடு தேவைப்படும். முயற்சி செய்வதை அனுமதிக்கிற சூழல் வீட்டில் இருந்ததே தவிர, முதலீடு போடுகிற நிலையில் பின்புலம் எதுவுமில்லை.

அதிக செலவில்லாமல் ஒரே தரத்தில் பனீர் உற்பத்தியை மேற்கொள்ள நிறைய புதிய முயற்சிகளை மேற்கொண்டேன். பெங்களூருவில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்பம் அறிந்த நிறைய நிபுணர்கள் இருந்தனர். கற்றுக் கொள்வதில் என்னிடம் தீராத ஆர்வம் இருப்பதை அறிந்ததும், அவர்களும் சிறப்பாக வழிகாட்டினர்.

நேற்று ஒரு மாதிரி, இன்று ஒரு மாதிரி என்கிற விதத்தில் உணவுப் பொருள் தயாரிப்பதை வாடிக்கையாளர்கள் எப்போதும் விரும்புவதில்லை. முன்பு இருந்ததைவிட,  இன்னும் தரத்தை உயர்த்தினால் வரவேற்பு கிடைக்கும். நாம் தயாரிக்கும் பொருளை இரண்டு முறை வாங்கிப் பார்த்து, தரமில்லை என்று வாடிக்கையாளர்கள் நினைத்துவிட்டால், அதன்பிறகு அவர்கள் மனதை மாற்றுவது மிகக் கடினம். அதனால், கொஞ்சம் கொஞ்சமாக  தரத்தை உயர்த்தியபோது, எந்தக் காரணத்துக்காகவும் ஏற்கெனவே இருக்கிற தரத்தைவிட, குறைவான தரத்தில்  பொருளை உற்பத்தி செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

சில நேரம் பால் நினைத்த தரத்தில் வரவில்லை என்றால், அதைப் பயன்படுத்தாமல் தவிர்த்துவிடுவேன். அது நஷ்டத்தை ஏற்படுத்தும். அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, அடுத்தமுறை எப்படி பாலின் தரம் குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். தரம் குறைந்தால் பரவாயில்லை என்று நஷ்டத்தை எதிர்கொள்ள பயந்தால், வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, நம்மையே ஏமாற்றிக்கொள்வோம். எனவே, எப்போதும் இதற்கு இடம்கொடுக்கக்கூடாது.

`பிராண்ட்’ பெயர் அறிமுகம்!

1995-லேயே நான் உற்பத்தி செய்கிற பனீர்-க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல, நல்ல பிராண்ட் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 1997-ல் ஒரு கம்ப்யூட்டர் ப்ரௌசிங் சென்டருக்குச் சென்று, ‘மில்க்’ என்ற சொல் வரக்கூடிய பெயர்களைத் தேடி, ‘மில்கி மிஸ்ட்’ என்ற பெயரை தேர்வு செய்து ப்ராண்ட் பெயராக அறிமுகம் செய்தேன்.

பனீர் பயன்பாடு நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து  இறங்கி, நகரங்களில் இருக்கும் நடுத்தர உணவகங்கள்வரை பிரபலமானது. சைவம் சாப்பிடுகிறவர்கள், அசைவ உணவகங்களுக்குப்  போனால் அவர்களுடைய தேர்வாக பனீர் பிரபலமடையத் தொடங்கியது. கோழி இறைச்சி மூலம் குறைந்த செலவில் புரதச் சத்து கிடைப்பதுபோல, பனீர் மூலம் சைவ உணவு சாப்பிடுவோரின் புரதத் தேவை பூர்த்தி அடைந்தது. நாளடைவில் வீட்டு சமையல் அறையில் இடம்பெறுகிற நிலையை பனீர் அடைந்த பிறகு,  அதனுடைய மார்க்கெட் பெரிய அளவுக்கு உயர்ந்தது. மார்க்கெட் தேவைக்கு ஏற்ப தரமான  பனீரை சப்ளை செய்ய  ஆட்கள் இல்லை.

சுவிட்சர்லாந்தின் தானியங்கி முறை!

ஜெர்மனியில் ஒரு கண்காட்சிக்குப் போனபோது, சுவிட்சர்லாந்து நாட்டில் முழுவதும் தானியங்கி முறையில்  பனீர்  தயாரிப்பு நடப்பதையும், சர்வதேச தரத்தில் பனீர் உற்பத்தி செய்வதையும் அறிந்தேன். அடுத்த நாள் அதை நேரில் பார்க்க, எங்கள் குழுவினருடன் சென்றேன். ஹோட்டலில் ரூம்  எடுத்து தங்க வசதி இல்லாமல், ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்கிற நிலையில்தான் என்னுடைய பொருளாதார வசதி இருந்தது. தேடல் இருந்ததால், எதுவுமே ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. அதிநவீன பனீர் உற்பத்தி தொழிற்சாலையைப் பார்த்தபோது, இதைப்போல நாமும் சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. தைரியமாக கடன் வாங்கி, அதிநவீன தானியங்கி உற்பத்தியை ஈரோட்டில் தொடங்கினேன்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்தால் மட்டுமே பனீர் புத்தம்புதிதாக  இருக்கும். வேறொரு நிறுவனம் கொடுத்த பெட்டியில் எங்கள் பொருளை வைத்து,  விற்பனை செய்வதில் நடைமுறை சிக்கல் இருந்தது.

பெட்டிக் கடைகளுக்கு ஃபிரிட்ஜ்!

பல ஆயிரம் கோடி வர்த்தகம் செய்கிற பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களைப்போல, நாங்களே ‘மில்கி மிஸ்ட்’ என்று ப்ராண்ட் பெயருடன், குளிர்சாதனப் பெட்டியை கடைகளுக்கு வழங்கினோம். பனீர் என்ற ஒரே ஒரு பொருளை மட்டும் குளிர்சாதனப் பெட்டி முழுவதும் நிரப்பி, விற்பனை செய்ய முடியாது. எங்களுடைய பொருளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, வேறு பிராண்ட் பொருட்களை கடைக்காரர்கள் அடுக்கி வைத்தனர்.

நாங்கள் வழங்கிய குளிர்சாதனப் பெட்டி முழுவதும் ‘மில்கி மிஸ்ட்’ ப்ராண்ட் பொருட்கள் மட்டுமே  வைக்க, என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தோம். தயிர், வெண்ணெய், நெய், சீஸ் என்று பால் சார்ந்த அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்தோம்.  ஒருகட்டத்தில் பனீரைவிட, மில்கி மிஸ்ட் தயிர் அதிகமாக விற்பனையாகத்  தொடங்கியது. நாங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு புதிய பொருளுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்களின் நம்பிக்கை கெடாமல், பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். ‘மில்கி மிஸ்ட்’ இந்தியாவின் முதல் தரமான பனீர் உற்பத்தி நிறுவனம்’என்ற நற்பெயரே,  எங்களை தொடர்ந்து இயங்க ஊக்குவிக்கிறது.

5 லட்சம் வாடிக்கையாளர்கள்...

ரூ.300 கோடி ஆண்டு வருமானம் ஈட்டுகிறபோது, ரூ.500  கோடி கடன் வாங்கி,  சர்வதேச தரத்தில் தொழிற்சாலை தொடங்கும் நம்பிக்கையை ‘மில்கி மிஸ்ட்’ ப்ராண்டை நேசிக்கும் 5 லட்சம் வாடிக்கையாளர்களே வழங்கினர்.

விவசாயத்தை நம்பி ஏமாற்றம் அடைந்திருக்கும் 40,000 விவசாயிகளுக்கு `மில்கி மிஸ்ட்’ நிறுவனம் நம்பிக்கை அளித்திருக்கிறது. 1,200 கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து பால் வாங்குகிறோம். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிட மிருந்து பால் கொள்முதல் செய்கிறோம். அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி, நேரடியாக பணத்தை செலுத்துகிறோம்.

சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்வது, நிலத்தடி நீரை உறிஞ்சாமல், பாலில் இருந்து பிரித்தெடுக்கிற தண்ணீரை மட்டுமே சிக்கனமாகப் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் சிந்தனைகளை பரவலாக கொண்டு சேர்ப்பது என பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். `மில்கி மிஸ்ட்’ என்ற பெயர், இத்தனை கோடி  லாபம் ஈட்டும் நிறுவனம் என்ற அடையாளத்தை மட்டும் பெறாமல், சமுதாய மேம்பாட்டுக்கு நிறைய பங்களிப்பு செய்த நிறுவனம் என்ற அடையாளத்தையும் பெற வேண்டும் என்பதே எங்களது லட்சியம்”  என்கிற சதீஷ்குமாருக்கு, வேறொரு லட்சியமும் இருக்கிறது.

தனக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும், மில்கி மிஸ்ட் நிறுவனம் எப்போதும் இளமையாகவே இருக்க புதிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே அது. லட்சியம் கொண்டு நித்தமும் உழைப்பவர்கள்,  நிச்சயம் ஜெயிக்கிறார்கள் என்பதற்கு சதிஷ்குமார் சிறந்த முன்னுதாரணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x